புதுடெல்லி: அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சில இணைய தளங்களில் வெளியான பதிவுகள் தங்களது நிறுவனத்தின் பெயரை கெடுக்கும் நோக்கத்தில் இருப்பதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தி இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனுஜ்குமார், அடுத்த கட்ட விசாரணை வரை நிறுவனத்தின் பெயரை கெடுக்கும் வகையில் ஆதாரமற்ற மற்றும் அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதற்கு, விநியோகிப்பதற்கு அல்லது பரப்புவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் சமூக ஊடக தளங்களில் இருந்து அதானி என்டர்பிரைசஸ் தொடர்பான பதிவுகளை நீக்கவும் உத்தரவிட்டார். இந்நிலையில் பத்திரிக்கையாளர் ரவி நாயர் உள்ளிட்டோர் டெல்லி நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர்.
இதனை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆஷிஷ் அகர்வால், மேல்முறையீட்டாளர்களை கேட்காமல் விசாரணை நீதிமன்றத்தால் விரிவான வழிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், செப்டம்பர் 6ம் தேதியிட்ட தடை உத்தரவை நிறுத்தி வைப்பதற்கு உத்தரவிடப்படுகின்றது. மேல்முறையீடு செய்தவர்கள் மற்றும் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தினை விசாரித்த பிறகு புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டார்.