எனது சேவையினை இன்னும் பெரிய அளவில் விரிவுபடுத்த வேண்டும். வாழ்வில் கடும் போராட்டங்களை சந்திக்கும் குழந்தைகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் நிறைய பேருக்கு பல்வேறு உதவிகள் செய்ய வேண்டும் என்பதே எனது வாழ்வின் பெரும் ஆசைகள் என்கிறார் நந்தினி. ஏழை எளியவர்களுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவை என்கிற கூற்றின்படி வாழ்ந்து வருபவர். சமூக சேவை செய்வதே எனது வாழ்வின் லட்சியம். சிறுவயது முதலே எனக்கு அதில்தான் ஈடுபாடு மற்றும் ஆர்வம் என்கிறார் நந்தினி.
யார் இந்த நந்தினி?
படிப்படியான வளர்ச்சியை அடைபவர்கள் தான் ஏறிவந்த படிகளையும் மறக்க மாட்டார்கள். முதல் படியில் ஏறுவதற்கு முன்பு தாங்கள் என்னவாக இருந்தோம் என்பதையும் மறந்துவிட மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் சமூக சேவகர் நந்தினி. சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த நந்தினிக்கு சொல்லிக் கொள்ளுமளவிற்கு பெரிய பின்புலம் இல்லை. ஆனால் இச்சமூகத்திற்கு அவர் செய்து வரும் செயல்கள் சொல்லும் அவர் யாரென்று. 80, 90களில் வெள்ளித்திரையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து தற்போது சின்னத்திரையில் கொடி கட்டிப் பறக்கும் நடிகை நளினியின் வளர்ப்பு மகள் நந்தினி. 8 வயதிருக்கும்போது தொடங்கிய இந்தப் பந்தம் இப்போதும் தொடர்கிறது. நளினியின் சீரிய வழிகாட்டுதலிலும், கனவான அக்கறையிலும் நல்ல முறையில் வளர்க்கப்பட்டு வந்தார் நந்தினி. இச்சமூகத்தின்பால் பெரிதும் அக்கறை கொண்டுள்ள நந்தினி பல்வேறு சமூகத் தொண்டுகளைத் தனிமனுஷியாகவும், பல்வேறு என்ஜிஒக்களுடன் இணைந்தும் செய்துவருகிறார்.
இவரது பணிகள்:
மனிதர்களில் இரண்டு வகை. ஒன்று தன்னைப் போலவே இவ்வுலகமும் கஷ்டப்பட்டு வர வேண்டும் என்பது. மற்றொன்று தான் கஷ்டப்பட்டது போல மற்றவர்களும் வேதனைப்படக்கூடாது, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து அவர்களை ஒரு படி மேலே தூக்கி விட வேண்டும் என்பது. நந்தினி இரண்டாம் வகை. ட்யூசன் எடுப்பது, கல்லூரி மாணாக்கருக்கு ட்யூசன் எடுப்பது, அடுக்ககத்தில் நண்பர்கள் உறவினர்களுக்கு மேக்கப் போட்டு விடுவது என அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு அன்னதானம், ஆன்மிகம், கல்வி என பலதரப்பட்ட உதவிகளை தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குச் செய்து வருகிறார். தனது வீட்டிலேயே சமைத்து பசித்திருக்கும் வயிறுகளின் பசிப்பிணி போக்க தன் கையாலே அன்னமிடுகிறார் நந்தினி. உணவிற்கு வழியில்லாமல் கோவில் ஒன்றில் அமர்ந்திருந்த போது நந்தினியின் உறவினர் ஒருவர் அவருக்கு உணவு வாங்கிக் கொடுக்க அந்த நாள் அவரது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக மாறி விடுகிறது.
ஒருவரிடம் கேட்பதற்கும் கூச்சப்பட்டு, பசியையும் வெல்ல முடியாமல் தவித்திருக்கும் மனங்களை எண்ணி நெக்கிருகிப் போனார் நந்தினி. தன்னால் இயன்ற உதவிகளை இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் மேலே குறிப்பிட்ட பலதரப்பட்ட வேலைகளைச் செய்து வருகிறார் நந்தினி. முருகனின் அதிதீவிரப் பக்தையான நந்தினி திருத்தணி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்ட கோவில்களுக்கு பல்வேறு வகையிலான திருப்பணிகளைச் செய்து வருகிறார். இக்கோயில்களின் நிர்வாகிகளும் கோவிலுக்கான எளிய தேவைகளை நந்தினியிடம் உரிமையாகக் கேட்டு நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
சமூகப் பணிகள்
பள்ளிக்கட்டணத்திற்கு என உதவி கோரும் குழந்தைகளுக்கு அவ்வப்போது உதவி வரும் நந்தினி இந்தாண்டு இரு குழந்தைகளின் முழுக் கல்விச் செலவையும் ஏற்றுள்ளார். எம்.பி.ஏ வரை படித்துள்ள நந்தினி மேலும் படிக்க ஆசைப்பட்டு, ஐஏஎஸ் படிப்பிற்காகத் தயாராகிவரும் அதே வேளையில் சட்டம் படிக்கவும் விருப்பப்பட்டு விண்ணப்பித்துள்ளார். கல்வியைப் போல சிறந்த ஆயுதம் வேறென்ன உண்டு. தொண்டு வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் என்பார்கள். கல்வி மூலம் அதைச் சாதித்து வருகிறார் சமூகசேவகியான நந்தினி. இவரது பணிகளுக்காக பல பாராட்டுதல்களும் விருதுகளும் பெற்று வருவது மகிழ்ச்சி என்கிறார். இந்த வருடத்திற்கான கலாம் நம்பிக்கை விருது பிரிவில் சிறந்த தன்னம்பிக்கை நாயகி விருதைப் பெற்றுள்ளார் நந்தினி என்பதும் குறிப்பிடத்தக்கது. இது போன்ற அங்கீகாரங்கள் மற்றும் பாராட்டுக்கள் எனது சேவைகளை திறம்பட செய்ய உதவுகிறது என பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். நான் சமூக சேவையில் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அதற்கான பல்வேறு முன்னெடுப்பு களையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். இனிவரும் நாட்களில் ஒவ்வொன்றாய் அதனை நிறைவேற்றுவேன் என நம்பிக்கையுடன் சொல்கிறார் நந்தினி.
- தனுஜா ஜெயராமன்