பனிப்பொழிவு காரணமாக சோர்வு, விபத்துகளை தவிர்க்க அனைத்து வாகன டிரைவர்களுக்கும் இலவச ‘டீ’: பள்ளிகொண்டா டோல்கேட் நிர்வாகம் வழங்குகிறது
பள்ளிகொண்டா: பனிப்பொழிவு காரணமாக சோர்வு ஏற்பட்டு, விபத்துளை தடுக்க அனைத்து வாகனங்களின் டிரைவர்களுக்கும் பள்ளிகொண்டா டோல்கேட் சார்பில் இலவசமாக டீ வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் வேலூர் உள்பட வடமாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அவ்வப்போது பனிப்பொழிவும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சமீப நாட்களாக வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. பனிமூட்டம் காரணமாக அனைத்து வாகனங்களிலும் காலையில் நீண்ட நேரம் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கிறது. அதேபோல் இன்று காலையும் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகளுக்கு சோர்வு ஏற்படாமல் இருக்கவும், பனியால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் நோக்கிலும், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட் நிர்வாகம் சார்பில் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களின் டிரைவர்களுக்கும் இன்று காலை முதல் இலவசமாக ‘டீ’ வழங்கப்படுகிறது. சென்னை-பெங்களூர், பெங்களூர்-சென்னை இருமார்க்கத்திலும் செல்லும் வாகனங்களுக்கு டீ வழங்கப்படுகிறது. இதுகுறித்து டோல்கேட் அருகே ஒலிபெருக்கி மூலம் டிரைவர்களுக்கு அறிவிப்பு செய்யப்படுகிறது. அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை டீ வழங்கப்படுகிறது. டிரைவர்கள் தூக்க கலக்கத்தில் இருந்து விடுபடவும், விபத்தில் இருந்து தவிர்க்கவும் டீ வழங்கப்படுவதாகவும், பனிப்பொழிவு காலம் உள்ள வரை டீ வழங்கப்படும் என டோல்கேட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பள்ளிகொண்டா டோல்கேட்டில் வாகன ஓட்டிகளுக்கு டீ கொடுப்பது அவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


