Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் உலா வந்த சாரைப்பாம்பு

*பயணிகள் அச்சம்

மேட்டுப்பாளையம் : 150 ஆண்டுகளை கடந்து நிற்கும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் மிகவும் பாரம்பரியமிக்கது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தினந்தோறும் பயணிகள் ரயிலும், நெல்லை, தூத்துக்குடி பகுதிகளுக்கு வாராந்திர சிறப்பு ரயிலும், சென்னைக்கு தினம்தோறும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும், யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற பாரம்பரியமிக்க மலை ரயிலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தான் ஊட்டிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணி நிமித்தமாக கோவை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.14.8 கோடி மதிப்பீட்டில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இரு எஸ்கலேட்டர்கள், பயணிகள் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் வகையில் நடைபாதை மேம்பாலம்,புதிய டிக்கெட் கவுண்டர் அலுவலகம், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் என வளர்ச்சி பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று ரயில் நிலையத்திற்கு செல்லும் பிரதான நுழைவு வாயில் சுவற்றின் ஓரம் சுமார் 6 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு உலா வந்தது. நீண்ட நேரமாக அந்த பாம்பு சுவற்றை தாண்டி மறுபுறம் ரயில்வே தண்டவாளத்திற்கு செல்ல முயற்சி செய்தது. இதனை கண்ட பயணிகள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்து நின்றனர். சற்றுநேரத்தில் தானாகவே பாம்பு புதருக்குள் சென்று மறைந்தது.

இதுகுறித்து ரயில்வே பயணிகள் கூறுகையில், ‘‘மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.இருந்தாலும் ரயில் நிலையத்தின் அருகே கருவேல மரங்கள் அடங்கிய புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டமும் இருந்து வருகிறது.

இதேபோல் ரயில் நிலைய நடைபாதைகளில் நாய்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் ரயில் நிலையம் வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு சமூக நல அமைப்புகளும், பயணிகளும் ஏற்கனவே ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டனர்.