திருமலை: காரில் கடத்திய ₹2 கோடி தங்கம், 1 கிலோ வெள்ளி நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பிடிபட்ட 2 பேரிடம் வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் வடக்கு மண்டல கமிஷனர் உத்தரவின்பேரில் நேற்றிரவு செகந்திராபாத் மேட்டுகுடா பகுதியில் போலீசார் தீவிர வாகன தணிக்கை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த 2 பேரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், காரில் சோதனை நடத்தினர். காரில் ₹2 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ தங்க கட்டிகள் மற்றும் 1 கிலோ வெள்ளி நகைகள் இருந்தது தெரிந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் பஜ்ஜூரி பூர்ணசந்தர் (49), சையத் பாபாஷெரீப் (25) என தெரிந்தது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து காருடன் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் இருவரிடமும் நகைக்கான ஆவணங்கள் எங்கே, இந்த நகைகள் எங்கிருந்து யாருக்காக கடத்தப்படுகிறது என்று தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.