காதலனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு? நிச்சயதார்த்த படங்களை நீக்கிய ஸ்மிருதி மந்தனா: திருமணத்தை ரத்து செய்ய முடிவு
மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. 29 வயதான இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலை காதலித்து வந்தார். இவர்களின் திருமணம் கடந்த 23ம்தேதி சாங்லியில் நடக்க இருந்தது. முந்தைய நாள் இரவில் சங்கீத் நிகழ்ச்சியின்போது ஸ்மிருதியின் தந்தை னிவாசுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் திருமணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பலாஷ் முச்சலும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் அறிவித்தனர். இதனிடையே திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக பலாஷின் சகோதரி பாலக் முச்சல் அறிவித்த சிறிது நேரத்திலேயே, நடன கலைஞரான மேரி டி கோஸ்டா என்ற பெண், இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பலாஷ் முச்சலுடன் செய்த ரகசிய சாட்டிங்கை பகிர்ந்தார்.
அந்தச் சாட்டிங்கில், மந்தனாவுடனான உறவு ஒரு ‘தொலைதூரக் காதல்’, அவர் எப்போதும் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இருப்பதாக பலாஷ் கூறியது போல உள்ளது. மேலும், அந்தப் பெண்ணின் அழகை வர்ணித்தும், அதிகாலை 5 மணிக்கு மும்பை வெர்சோவா கடற்கரைக்கு வரச் சொல்லியும், நீச்சல் மற்றும் ஸ்பாவிற்கு செல்லலாம் என்றும் பலாஷ் அழைப்பு விடுத்ததுபோல அந்த ஸ்கிரீன்ஷாட்டில் பதிவாகியுள்ளது. குறிப்பாக, ”நீங்கள் ஸ்மிருதியை காதலிக்கிறீர்களா?” என அந்தப் பெண் கேட்ட கேள்விக்கு, ”லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்”, பட வேலையில் 3 மாதம் பிஸியாக இருந்தேன்” என பலாஷ் மழுப்பலாகப் பதிலளித்தது இடம் பெற்றுள்ளது. இந்த ஸ்கிரீன் ஷாட்கள் உண்மையானவையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், பகிரப்பட்டவற்றில் பலாஷின் பெயர் மற்றும் ஐடி இடம்பெற்றிருந்தன.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஸ்மிருதி நிச்சயதார்த்த படங்கள், வீடியோக்கள் மற்றும் காதலனுடன் எடுத்த படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கி உள்ளார். திருமணக் கொண்டாட்டங்களின் போது, ஒரு பெண் நடன இயக்குனருடன் பலாஷ் முச்சல் நெருக்கமாக இருந்ததாகவும், அதுதான் பிரச்னைக்கு உண்மையான காரணம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் காதலனை பிரியும் முடிவில் ஸ்மிருதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


