Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உலகத் தலைவர்கள் மத்தியில் கலகலப்பு; புகைப்பழக்கத்தை கைவிட்டால் கொலை செய்யவும் தயங்க மாட்டேன்: இத்தாலி பிரதமர் மெலோனி பரபரப்பு பேச்சு

கெய்ரோ: சிகரெட்டை விட்டால் ஒருவேளை நான் யாரையாவது கொலை செய்து விடுவேன் என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வேடிக்கையாகக் கூறியது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. எகிப்தில் நடைபெற்ற காசா உச்சி மாநாட்டின் போது உலகத் தலைவர்கள் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, துருக்கியை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற உறுதியேற்றுள்ள அந்நாட்டு அதிபர் எர்டோகன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் புகைப்பிடிக்கும் பழக்கம் குறித்து கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர் மெலோனியிடம், ‘நீங்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறீர்கள்.

ஆனால், நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்’ என்று கூறினார். இதைக் கேட்டு அங்கிருந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இங்கிலாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்டோர் சிரித்தனர். மக்ரோன், ‘அது முடியாத காரியம்’ என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த மெலோனி, ‘எனக்குத் தெரியும், புகைப்பிடிப்பதை கை விட்டால், ஒருவேளை நான் யாரையாவது கொலை செய்து விடுவேன்’ என்று நகைச்சுவையாகக் கூறினார். சில ஆண்டுகளாக புகைப்பழக்கத்தை கைவிட்டிருந்த நிலையில், மீண்டும் மெலோனி புகைக்கத் தொடங்கியதாக அவரே சமீபத்தில் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும், துனிசிய அதிபர் கைஸ் சயீத் உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களுடன் நல்லுறவை வளர்க்க சிகரெட் உதவியதாகவும் அவர் வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதே மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் மெலோனியை வெகுவாகப் புகழ்ந்தார். அவர் பேசுகையில், ‘ஒரு பெண்ணை ‘அழகானவர்’ என்று அழைப்பது இப்போது அரசியல் ரீதியாக ஆபத்தானது; ஆனால் நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இவர் ஓர் அழகான இளம் பெண்’ என்றார். மேலும் மெலோனியை சுட்டிக்காட்டி, ‘நீங்கள் அழகானவர் என்று அழைக்கப்படுவதை ஆட்சேபிக்க மாட்டீர்கள், இல்லையா? ஏனெனில் நீங்கள் அப்படித்தான் இருக்கிறீர்கள். நீங்கள் சிறந்த மற்றும் வெற்றிகரமான அரசியல்வாதி’ என்று பாராட்டினார். இந்த மாநாட்டில் பேசிய மெலோனி, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டால், பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க இத்தாலி தயாராக இருப்பதாகவும் சமிக்ஞை கொடுத்தார்.