Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸ்மோக் ஆன் தி பேக் வாட்டர்

மங்களூர் , கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பேக் வாட்டர் கலாச்சாரம் நிச்சயம் இந்தியாவின் மற்ற பகுதிகளை விடவும் மிகவும் வித்தியாசமானது. அங்கிருக்கும் மக்களின் வாழ்வியலும் நகரத்து மெட்ரோ மக்களின் வாழ்வியலும் சற்றும் சம்பந்தமில்லாமல் இருக்கும். எப்படி நம் வீடுகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிற்கின்றனவோ அதேபோல் அங்கே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் சிறிய படகுகள் நிற்கும். அவர்களின் போக்கு வரத்து முழுவதும் நீரில் தான். மொத்த உலகமும் நீரும் நீர் சூழ்ந்த பகுதியாகவும் இருக்கும். அவர்களின் பயிரிடும் முறை கூட நீரில் வளரும் தாவரங்களை தான் அதிகம் பயன்படுத்துவார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அவர்கள் தேவைக்கான காய்கறிகள் பழங்கள் கூட பயிரிட்டு இருப்பார்கள். ஒவ்வொரு வீட்டின் எதிரில் இருக்கும் நீர்ப் புறத்தில் நிச்சயம் மீன் பிடிப்பதற்கான அமைப்புகள் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பேக் வாட்டர் கிராமத்தில் இருந்து உயரப் பறக்க துடிக்கும் ஒரு இளம்பெண்.

படித்த பெண்ணுக்கே உரிய சுதந்திரமான சிந்தனை, தைரியமான பேச்சு என அத்தனையும் சுற்றத்தாரின் கிசு கிசுகிசுகளுக்கு உட்படுகிறது. எத்தனையோ புறணிகள் எத்தனையோ வதந்திகள் அத்தனையும் கடந்து தனக்கு பிடித்த படிப்பை முடித்து, நல்ல வேலையும் கிடைக்க நகரத்து வாழ்க்கைக்குச் சென்று விடுகிறாள் அந்தப் பெண். பல வருடங்கள் கழித்து மீண்டும் தனது ஊருக்கு திரும்பும் அவளுக்கு அதிர்ச்சி. இன்னமும் தனது கிராமம் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே இருக்கிறது. தேங்கிய நீரைச் சூழ்ந்த புகைமூட்டம் போல் இன்னமும் அந்த மக்களின் மனதும் பிற்போக்குத்தனத்தால் புதைந்து கிடைக்கிறது. அதைத்தான் விளக்கமாக விளக்குகிறது இந்த ஸ்மோக் ஆன் தி பேக் வாட்டர் புதினம். இன்னமும் மனத்தளவில் புகை மூட்டம் போல் மறைந்து கிடக்கும் மக்களின் மனநிலையை எடுத்து வைக்கிறது இந்த புதினம்.

லெஸ்லி கார்வால்ஹோ எழுத்தில் நிச்சயம் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை காலம் காலமாக கடைப்பிடித்து புரையோடிக் கிடக்கும் சமூகத்தின் மேல் எழுத்தாளர் பல கேள்விகளை இந்தப் புதினம் மூலம் எடுத்து வைக்கிறார். எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர். லெஸ்லி கார்வால்ஹோ பெங்களூரில் பிறந்து வளர்ந்து ஜெர்மனியில் கலாசார கல்வி, பின்னர் நியூயார்க் திரைப்பட அகாடமியில் திரைப்படப் பயிற்சியையும் பெற்றிருக்கிறார். அவருடைய செரிஷ் & ஐ குறும்படம் பல விருதுகளை வென்றது.அவரது முதல் படைப்பான ‘தி அவுட்ஹவுஸ்’-ஐ எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார். இது ‘அரவிந்தன் புரஸ்காரம்’ மற்றும் ‘தி கொல்லாபுடி னிவாஸ் தேசிய விருது’ மற்றும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான பல விருதுகளைப் பெற்றது.

‘ஸ்மோக் ஆன் தி பேக்வாட்டர்ஸ்’ அவரது முதல் நாவல். தற்போது ‘ரட்டிவல்லா’ என்ற தமிழ் திரைப்படத்திலும், சிறுகதைகள் புத்தகத்திலும் பணியாற்றி வருகிறார். “இன்றும் கல்வி, வேலை என பெண்கள் எத்தனையோ வழிகளில் முன்னேறினாலும் இரவு வீட்டுக்கு வந்து என்ன சமைப்பது என்கிற சிந்தனையுடன்தான் வாழ வேண்டியிருக் கிறது. எத்தனை ஆண்கள் இரவு உணவு என்ன? காலை உணவு என்ன? என்கிற சிந்தனையில் இருக்கிறார்கள். போதாக்குறைக்கு அவர்கள் தான் அவர்கள் திருமண வாழ்க்கைக்காக பெற்றோர் குடும்பத்தையும் தியாகம் செய்தாக வேண்டும். இதில் வடிவமைக்கப்பட்ட போலி கலாச்சாரக் கட்டமைப்புகளின் நெருக்கடி. இப்போதும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள் ஆனால் எல்லாமே பெண்களாக ஒன்றிணைந்து போராடிப் பிடுங்கிய சுதந்திரம் தான் இது. எதுவும் இங்கே விரும்பிக் கொடுக்கப்படவில்லை” அதை நோக்கிய எழுத்துப் பயணத்தைத் தான் இப்போது நான் தொடங்கி இருக்கிறேன் ஆழ்ந்த சிந்தனையுடன் முடித்தார் லெஸ்லி கார்வால்ஹோ.

- ஷாலினி நியூட்டன்