புன்னகையை மட்டும் காட்டிட்டு ஆதரவாளர்களை தவிக்க விடும் பலாப்பழக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிர்வாகிகள் கண்டுகொள்ளாததால் இலைக்கட்சி மாஜி கடும் அப்செட்டில் இருக்கிறாராமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்ட இலை கட்சி மாஜி அமைச்சர் விஜயமானவர் திடீரென வெளியில் வருவதும், பின்னர் சைலன்டாக இருந்து வருவதும் ஆரம்பத்தில் இருந்தே வாடிக்கையாக வைத்துள்ளாராம்.. எதையாவது வைத்து அரசியல் செய்து விடலாம் என அவர் நினைக்கிறாரு.. ஆனால், எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லையாம்.. இதனால் மறுபடியும் அவர் சைலன்ட் மோடுக்கு சென்று விட்டாராம்.. தேர்தல் நெருங்கிக் கொண்டு வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் புலம்புகிறாராம்.. மாஜி அமைச்சர் எப்போதுமே இப்படி தான் என கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிர்வாகிகள் கூட பெரிதாக கண்டு கொள்ளாததால் கடும் அப்செட்டில் இருந்து வருகிறாராம் மாஜி அமைச்சர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வில்லங்க இடத்தை சேல்ஸ் செஞ்ச விஷயத்துல சட்டம் தன் கடமைய செஞ்சிடுச்சாமே எங்கே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டத்துல ஆறுல தொடங்கி காடுல முடியுற நகரத்துல கடவுள் பெயரை கொண்ட இலைபார்ட்டி ஒருத்தரு இருக்காரு.. இவரு, ஒரு பெண்ணிடம் வீட்டு மனை சேல்ஸ் செய்றதாக சொல்லி இருக்காரு.. அந்த பெண்ணும், சொந்தக்காரங்களோட சேர்ந்து வீட்டு மனைகளை வாங்கினாங்களாம்.. வீட்டு மனை வாங்கியதுக்கு அப்புறமாக, பட்டா கேட்டு விண்ணப்பிச்சா, அந்த கிராமத்தோட நிர்வாக ஆபிசரு, நம்பர் தப்பா இருக்குது பட்டா வழங்க முடியாதுன்னு சொல்லி இருக்காரு.. இதனால அதிர்ச்சியான பெண்ணும், சொந்தக்காரங்களோட போயி, அந்த இலை பார்ட்டிகிட்ட கேட்டிருக்காங்க.. அப்போ, அந்த இடத்தில் வில்லங்கம் இருக்குது.. பணத்தை திருப்பி கொடுத்துடுறேன்னு சொல்லி செக் கொடுத்திருக்காரு, அதையும், வாங்கி பேங்குல கொடுத்தா செக் பவுன்ஸ் ஆகிடுச்சாம்.. திரும்பவும், இலை பார்ட்டிய கேட்டா? உன்னால ஆனதை பார்த்துக்கோன்னு மிரட்டுறாராம்.. இது சம்பந்தமாக அந்த பெண் மாவட்ட உயர் காக்கிக்கு புகார் கொடுத்திருக்காங்க.. இலை பார்ட்டி சட்டம் தெரிஞ்சவராம்.. இருந்தாலும் சட்டம் தன் கடமைய செஞ்சிடுச்சு.. கேஸ் போட்டு விசாரணை போய்கிட்டிருக்குதாம்.. இந்த மேட்டர்தான் குயின்பேட்டை மாவட்டத்துல பரபரப்பு பேச்சா ஒலிக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேடிக்கை பார்க்கும் ஒன்றியத்தால் காரை கடலோர மக்கள் கொந்தளிப்பில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பிரெஞ்சு கலாச்சாரம் கொண்ட புதுச்சேரியில் தமிழகத்தின் இடைபட்ட ‘காரை’ என்றொரு பகுதியும் அடங்கும்.. இங்குள்ள மீனவர்களை இலங்கை ராணுவம் சிறைபிடிப்பது அவ்வப்போது அரங்கேறுகிறதாம்.. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகளின் உதவியுடன் காரை மக்கள் பிரதிநிதிகள் முன்னெடுத்தார்களாம்.. ஆனால் தாக்குதல் ஓய்ந்த பாடில்லாததால் மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளதாம்.. அதிலும் ஆந்திர மீனவர்களால் விரட்டி விரட்டி தாக்கப்பட்ட சம்பவத்தால் ஊரே கொந்தளிப்பில் இருக்காம்.. மாநிலங்களுக்கு இடையிலான உறவை பாதிக்கின்ற இத்தகைய போக்கை ஒன்றியத்தை ஆளும் அரசு வேடிக்கை பார்ப்பதா என்ற விமர்சனங்கள் காரை மட்டுமின்றி புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களிலும் எதிரொலிக்கிறதாம்.. இதன் தாக்கம் பொதுத்தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் மீனவ சமுதாயத்துக்கு ஆதரவாக போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் தயாராகி வருகிறதாம்.. இதுபற்றிதான் காரை கடலோரம் முழுக்க பரவலாக பேச்சு ஓடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அப்பப்ப பெயருக்கு புன்னகையை மட்டும் காட்டி விட்டு ஒதுங்கிக் கொள்ளும் பலாப்பழக்காரரால் ஆதரவாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாயிட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஹனிபீ மாவட்டத்தைச் சேர்ந்த பலாப்பழக்காரரின் ஆதரவாளர்கள் அனைவரும் புலம்பல் மன நிலைக்கு வந்துட்டாங்களாம்.. அரசியலில் என்ன மாற்றம் நடந்தாலும், தனக்கோ, தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கோ பாதிப்பு ஏற்படும் சூழல் வந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் என் வழி.... தனி வழி... என்ற கோணத்தில் பயணித்துக்கொண்டு இருக்கிறாராம் பலாப்பழக்காரர்.. இவரது நடவடிக்கையால் ஆதரவாளர்கள் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாங்களாம்.. இவரது வீடு இருக்கும் பிக்பாண்ட் நகரம் மற்றும் அவரது தொகுதியான இரண்டெழுத்து ஊர், இங்கிருந்து தலைநகருக்கு விமானத்தில் செல்வதற்காக தூங்கா நகர்... இந்த மூன்று இடங்கள்தான் அவரது வழக்கமான பயண பட்டியலில் வருதாம்.. இதை தவிர்த்து தேவைப்பட்டால் கோயிலுக்கு செல்வது, குறிப்பாக மலையாள தேசத்திற்கு அவ்வப்போது விசிட் என்ற அடிப்படையில் தான் இயங்கி ெகாண்டிருக்கிறாராம்.. இதில், வரும்போதும், போகும்போதும் எப்போதாவது ஒரு முறை ஆதரவாளர்களை சந்திப்பது, அப்படியே சந்தித்தாலும் பெயருக்கு ஒரு புன்னகையுடன் ஒதுங்கிக் கொள்வது என்ற நிலையில் இருப்பதால், எந்த ‘கவனிப்பும்’ இல்லாமல் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்களாம்.. அதேசமயம், எங்கே சென்றாலும் ஊடகத்தினரை மட்டும் சந்திக்க தயங்குவதே இல்லையாம்.. பலாப்பழக்காரரின் அதிகப்படியான சந்திப்புகள் ஊடகத்தினரிடம் மட்டும்தான் இருக்குதாம்.. பலாப்பழக்காரரின் இந்த நடவடிக்கை தான் அவரது ஆதரவாளர்களை புலம்ப வைத்துள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பத்திரப்பதிவு ஆபீசில் கூட ஆயுத பூஜை, தீபாவளி வசூல் கறாராக நடக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சென்னையையொட்டி மரியாதையுடன் கூடிய பெரிய புதூரில் 150 ஆண்டு பழமையான கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வந்துச்சு.. அப்புறமா, சுற்றுவட்டார பகுதியில் தொழிற்பூங்கா, பல அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வந்ததால் அடிப்படை வசதிகளுடன் புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டு செயல்படுது.. இப்ப தினமும் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் பத்திரப்பதிவுக்காக வந்து செல்றாங்க.. அதன்படி நூற்றுக்கணக்கான பத்திரப்பதிவு செய்யப்படுகிறதாம்.. அப்படி வருபவர்களிடம் அரசு நிர்ணயித்திருக்கும் வழிகாட்டி மதிப்பீடு செய்யணும். ஆனால், வீட்டுமனை பத்திரப்பதிவுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், ஏக்கர் கணக்கில் பத்திர பதிவு செய்ய வேண்டுமென்றால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும் கையூட்டு கொடுத்தா தான் வேலை நடக்குதாம்.. அதோடு மட்டுமல்ல.. சார்பதிவாளர் அலுவலக எல்லையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் தினக்கூலி வேலை செய்யும் நபர் மூலம் போன் செய்து, ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்கு கணிசமாக ஒரு தொகையை வசூலிச்சிட்டாங்களாம்... தீபாவளி நெருங்குவதால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மீண்டும் போன் செய்து சார் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்கொடையாக நகை, பணம் வழங்க வேண்டும் என வசூல் வேட்டை ஆரம்பிச்சிட்டாங்களாம்.. எனவே லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவங்க குரல் ஒலிக்க தொடங்கி இருக்கு..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.