ஸ்மார்ட் வகுப்பறைகளை காட்டிலும் ஸ்மார்ட் ஆசிரியர்கள் முக்கியம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தல்
புதுடெல்லி: ஸ்மார்ட் வகுப்பறைகள் , ஸ்மார்ட் கரும்பலகைகள் மற்றும் நவீன வசதிகளை காட்டிலும் ஸ்மார்ட் ஆசிரியர்கள் மிக முக்கியம் என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய ஆசிரியர் விருது வழங்கும் விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். கற்பித்தல் மற்றும் கற்றலில் முன்மாதிரியான பங்களிப்பிற்கான 45க்கும் மேற்பட்ட கல்வியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். அப்போது பேசிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, ‘‘ஸ்மார்ட் கரும்பலகைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் பிற நவீன வசதிகள் அவற்றின் சொந்த முக்கியத்துவத்தை கொண்டுள்ளன.
ஆனால் மிக முக்கியமான விஷயம் ஸ்மார்ட் ஆசிரியர்கள். ஸ்மார்ட் ஆசிரியர்கள் தங்களது மாணவர்களின் வளர்ச்சியின் தேவைகளை புரிந்து கொள்ளுபவர்கள். பாசம் மற்றும் உணர்திறன் மூலமாக படிப்புக்களை சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுகிறார்கள். இத்தகைய ஆசிரியர்கள் மாணவர்களை சமூகம் மற்றும் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் திறன் கொண்டவர்களாக மாற்றுகிறார்கள்.
விவேகமுள்ள ஆசிரியர்கள் மாணவர்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு உணர்வை வளர்ப்பதற்கு உழைக்கிறார்கள். மாணவர்களின் குணத்தை வளர்ப்பது ஒரு ஆசிரியரின் முதன்மை கடமையாகும். நல்லொழுக்க நடத்தையை பின்பற்றும் உணர்திறன், பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்புள்ள மாணவர்கள் போட்டி, புத்தக அறிவு மற்றும் சுயநலத்தில் மட்டுமே ஆர்வமுள்ள மாணவர்களை விட சிறந்தவர்கள்’’ என்றார்.