Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சின்ன வெங்காயம் கிலோ ரூ.80க்கு விற்பனை

ஊட்டி: சிறிய வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை பிரதான தொழிலாக உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. சிறிய வெங்காயம்,பெரிய வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், முருங்கை, வெண்டை, பாகற்காய் போன்ற காய்கறிகள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக, சமவெளிப் பகுதிகளில் விளையும் காய்கறிகள் நீலகிரி மாவட்டத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலை அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் வெங்காயம் விளையாத நிலையில், இவைகள் வெளி மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகவில் இருந்து வரும் நிலையில், எப்போதும் விலை சற்று அதிகமாக காணப்படும். கடந்த ஒரு வாரமாக சின்னவெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து தற்போது கிலோ ஒன்று ரூ.60 முதல் ரூ.80 வரை தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், பெரும்பாலான மக்கள் சின்ன வெங்காயத்தை வாங்குவதை தவிர்த்துவிட்டு சாம்பார் மற்றும் அனைத்து சமையலுக்கும் பெரிய வெங்காயத்தை வாங்கிச் சென்றனர். மேலும் விலை உயரலாம் என்பதால் இல்லத்தரசிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் அப்செட் ஆகியுள்ளனர். இது குறித்து சில கடைக்காரர்கள் கூறுகையில், சின்னவெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் விலையை கேட்டுவிட்டு திரும்பி விடுகின்றனர். வெங்காயம் வரத்து குறைந்துள்ளாதல் மேலும் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றனர். சின்ன வெங்காயம் விலை உயர்வால் பெரும்பாலான வீடுகளில் மட்டுமின்றி, ஊட்டியில் உள்ள ஓட்டல்களிலும் சாம்பார் மற்றும் அனைத்திலும் பெரிய வெங்காயத்தின் ருசியே தெரிகிறது.