சின்ன வெங்காயம் சாகுபடிக்கு உகந்த பருவகாலம் அக்டோபர், நவம்பர் மாதங்கள்தான். குறுகிய காலத்தில் நிறைவான லாபம் தரக்கூடிய பயிர்களில் சின்ன வெங்காயமும் ஒன்று. நேரடி விதைப்பிலும், நாற்று முறையிலும் சாகுபடி செய்யப்படும் இந்த சின்ன வெங்காயத்தை எவ்வாறு உற்பத்தி செய்யலாம் என்பதையும், எப்படி பராமரிக்க வேண்டும் என்பதையும் இந்தப் பக்கத்தில் பார்க்கலாம்.
விதை உற்பத்திக்குத் தோதான நிலம்
சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதற்கு, முதலில் நிலத் தேர்வு அவசியமானது. முந்தையப் பருவத்தில் வேறு ரக வெங்காயம் பயிரிடப்படாத வயலைத் தேர்ந்தெடுத்தல் மிக அவசியம். இவ்வாறு செய்வதால், ஏற்கனவே பயிரிடப்பட்ட வேறு ரக வெங்காயத்தின் மூலம் ஏற்படும் பயிர்களால், இனக் கலப்பு போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.
விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம்
வெங்காய விதை உற்பத்தி மற்ற காய்கறி பயிர்கள் விதை உற்பத்தியில் இருந்து மாறுபட்டது. ஏனெனில், வெங்காய விதை உற்பத்தி இரண்டு வெவ்வேறு பருவங்களில் செய்ய வேண்டியுள்ளது. நாம் தேர்ந்தெடுக்கும் முதல் பருவம், நன்கு திரண்ட வளர்ச்சியுடன் செழிப்பான நல்ல வெங்காயங்கள் உற்பத்திக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இரண்டாவது பருவம் நட்ட வெங்காயங்கள் மேலும் வளர்ச்சி பெற்று பூக்களை உருவாக்கவும் அப்பூக்களில் தரமான விதைகள் உருவாகவும் மிகவும் ஏற்றதாக இருக்க வேண்டும். இவ்விரு நிலைகளை கருத்தில் கொண்டு பார்க்கும்போது ஜூன் - செப்டம்பர் வெங்காய உற்பத்திக்கும் அக்டோபர் - மார்ச் வெங்காய விதை உற்பத்திக்கும் ஏற்ற பருவங்களாகும். இப்பயிரில் பருவங்கள் மாறி சாகுபடி செய்தால் உண்மையான விதைகள் உற்பத்தி செய்வது மிகவும் கடினம்.
வளமான நாற்றுக்களைப் பெற
“விளையும் பயிர் முளையிலே” என்ற பழமொழிக்கு ஏற்ற தரமான விதைகளைத் தேர்ந்தெடுப்பதுடன், அவ்விதைகளை நல்ல வீரியமுள்ள நாற்றுக்களை நடுவதால் அந்நாற்றுக்கள் நன்றாக வளர்ந்து பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல்களை எதிர்த்து வளரும்.விதை தேர்ந்தெடுத்தலின் நன்மைவளமான நாற்றுக்களைப்பெற தரமான வெங்காய விதையை பயன்படுத்த வேண்டும். நாம் பயிரிடும் பயிர் மகசூல் விதையின் தரத்தை பொறுத்தே அமையும். விதை உற்பத்தி செய்யும் பயிரில் மகசூலுடன் ரகத்தினுடைய பாரம்பரிய குணாதிசயங்களையும் பராமரிப்பது மிக முக்கியம். அது விதைக்கும் விதையின் தரத்தை பொறுத்தே இருக்கும். எனவே விதை உற்பத்தி பயிர் விதைப்பிற்கு தேர்ந்தெடுக்கும் விதைகளின் தரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
நாற்றங்கால் தேர்வு
நல்ல தரமான விதைகளை பெற்ற பின், நல்ல நாற்றுக்களை தயாரிப்பது மிக முக்கியம். அதனால், நல்ல வீரியமுள்ள நாற்றுக்களைப் பெற நன்கு பண்படுத்திய ஒரு சென்ட் நிலத்திற்கு 200 கிலோ வரை மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் போட்டு, மேட்டுப் பாத்திகளில் நாற்றுவிட வேண்டும்.
விதைப்பு
ஒரு ஏக்கருக்குத் தேவையான 2.5 - 3 கிலோ விதையை விதைக்க 3 சென்ட் நாற்றங்காலில் விதைப்பு போதுமானது. மேட்டுப்பாத்திகளில் 10 செ.மீ. இடைவெளியில் கோடுகள் போட்டு விதைகளைப் பரவலாக விதைக்க வேண்டும். பின், கோடுகளில் போட்ட விதைகளை மணல் அல்லது நாற்றங்கால் மண் கொண்டு மூடி விட வேண்டும். அதன் பிறகு மேட்டுப்பாத்திகள் நன்கு மூழ்கும் அளவிற்கு நீர் பாய்ச்ச வேண்டும்.
நாற்றங்காலுக்கு உரம் இடுதல்
ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு இரண்டு கிலோ டி.ஏ.பி உரம் இடுவதால் நாற்றுக்கள் நன்கு ஊட்டத்துடன் வளரும். மேலும், நாற்றுக்களைப் பிடுங்கும் போது வேர் அறுபடாமல் சுலபமாக வரும். டி.ஏ.பி உரம் இல்லாவிட்டால், 6 கிலோ யூரியாவும் 12 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் சேர்த்து இடலாம். வேர் அறுபடாத நாற்றுக்களை வயலில் நடும்போது எளிதில் அவை நிலத்தில் பிடிப்பு கொள்கின்றன.
நாற்றின் வயது
விதைப் பயிர் செழித்து வளர்வதில் நாற்றின் வயது முக்கிய பங்கு வகிக்கிறது. வயது குறைந்த நாற்றையோ அல்லது வயது அதிகமான நாற்றையோ நடுவதால் மகசூல் குறையும். அதனால், வெங்காய நாற்றுக்களை, நாற்று விட்ட 35 - 40 நாட்களில் எடுத்து விட வேண்டும்.
தரமான வெங்காயம் உற்பத்தி செய்தல்
வெங்காய விதை உற்பத்தியில் முதல் பருவத்தில் தரமான வெங்காயம் உற்பத்தி செய்வது மிக முக்கியம். நாம் உற்பத்தி செய்யும் வெங்காயத்தைப் பொறுத்தே விதை உற்பத்தித் திறன் மற்றும் தரம் அமையும்.(சின்ன வெங்காயம் சாகுபடி குறித்த செய்திகள் அடுத்த இதழிலும் தொடரும்)
 
  
  
  
   
