தூக்க மாத்திரை கொடுத்து சாகாததால் உடலில் மின்சாரம் பாய்ச்சி கணவரை கொன்ற மனைவி: கள்ளக்காதலனுடன் சேர்ந்து பயங்கரம்
புதுடெல்லி: தூக்க மாத்திரை கொடுத்தும் கணவர் சாகாததால் அவரது உடம்பில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை டெல்லி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பகுதியைச் சேர்ந்த கரண் தேவ் (36) என்பவர், கடந்த 13ம் தேதி தனது வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அவரது மனைவி சுஷ்மிதா தெரிவித்தார். ஆனால், இந்த சம்பவம் விபத்து என்று நம்பிய கரண் தேவின் குடும்பத்தினர், பிரேதப் பரிசோதனை செய்ய மறுப்பு தெரிவித்தனர்.
இருப்பினும், கரண் தேவ் இளம் வயதில் இறந்ததாலும், மரணத்தில் சந்தேகம் இருந்ததாலும், காவல்துறையினர் பிரேதப் பரிசோதனையைக் கட்டாயப்படுத்தி, உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதுவரை சாதாரண விபத்து மரணமாகவே கருதப்பட்டது. இந்த நிலையில், கரண் தேவின் தம்பி குணால் தேவ், தனது அண்ணி சுஷ்மிதாவின் இன்ஸ்டாகிராம் உரையாடல்களைப் பார்த்தபோது கொலைச் சதி அம்பலமானது. அதில், சுஷ்மிதாவும், கரணின் சித்தப்பா மகனான ராகுலும் கள்ளக்காதலர்கள் என்பதும், இருவரும் சேர்ந்து இந்தக் கொலையைத் திட்டமிட்டதும் தெரியவந்தது. கடந்த 12ம் தேதி இரவு, கரணின் உணவில் 15 தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளனர்.
ஆனால் அவர் உடனடியாக இறக்காததால், ‘மின்சார ஷாக் கொடு’ என ராகுல் யோசனை கூறியுள்ளார். அதன்படி, தூக்க மயக்கத்தில் இருந்த கரணின் விரலில் மின்சாரத்தைப் பாய்ச்சி, அது விபத்து போல சித்தரிக்க முயன்றுள்ளனர். இந்த உரையாடல் ஆதாரத்துடன் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, சுஷ்மிதாவும் ராகுலும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், கணவர் தன்னை அடித்துத் துன்புறுத்தியதால் அவரை கொன்றதாக சுஷ்மிதா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். போலீசார் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.