புதுச்சேரி: அதிகளவில் தூக்க மாத்திரைகள் மற்றும் ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு ‘மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு’ அழகி தற்கொலை செய்து கொண்டது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காந்தி (57). கூலி தொழிலாளி. இவரது மனைவி லதா, கடந்த 2012ல் இறந்துவிட்டார். இதனால் காந்தி தனது மகள் சங்கரபிரியா (எ) சான்ரேச்சல்(26) என்பவருடன் தனியாக வசித்துள்ளார்.
சான்ரேச்சல் கடந்த 2024 ஜூன் 10ம் தேதி, 100 அடி சாலை ஜான்சி நகரை சேர்ந்த கருணாமூர்த்தி மகன் சத்யா (28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சான் ரேச்சலுக்கும், சத்யாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கணவர் வெளியே சென்றிருந்த நிலையில், கடந்த மாதம் 6ம் தேதி இரவு 8.30 மணிக்கு சான்ரேச்சல் தந்தை காந்திக்கு போன் செய்து, தான் அதிகளவு தூக்க மாத்திரை மற்றும் ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு விட்டதாகவும் தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறும் கூறியுள்ளார்.
உடனே பதற்றமடைந்த காந்தி அங்கு சென்று மகளை மீட்டு புதுவை அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தார். மருத்துவரிடம் சான் ரேச்சல், கடந்த ஜூன் 5ம் தேதி இரவு 9.30 மணிக்கு அதிகளவில் ரத்தஅழுத்தம் மற்றும் தூக்க மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டதாக கூறியுள்ளார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சான் ரேச்சல் ஜூன் 8ம் தேதி தந்தை காந்திக்கு போன் செய்து தன்னை டிஸ்சார்ஜ் செய்துவிட்டதாகவும், வீட்டுக்கு அழைத்து செல்லுமாறும் கூறியுள்ளார்.
அவர் மருத்துவமனைக்கு வந்து விசாரித்தபோது, சான்ரேச்சலை முறைப்படி டிஸ்சார்ஜ் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர், தொடர்ந்து சிகிச்சை பெறும்படி கூறி மருத்துவமனையிலேயே விட்டு சென்றுவிட்டார். பிறகு சான் ரேச்சல் மருத்துவர்களின் அனுமதியின்றி மருத்துவமனையில் இருந்து வெளியேறி, ஆட்டோ மூலம் காராமணிக்குப்பத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்தார். பிறகு அங்கிருந்த அவரது ஆடைகளை எடுத்துக்கொண்டு கணவர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 13ம் தேதி சான் ரேச்சலுக்கு கை, கால், முகம் வீக்கமடைந்து விட்டதாகவும், அவரை மூலகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் காந்திக்கு தகவல் கிடைத்தது. ஜூன் 20ம் தேதி அவருக்கு கிட்னி செயலிழந்துள்ளதாக கூறி மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சான் ரேச்சல் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காந்தி புகாரின்படி உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், சான்ரேச்சல் பல்வேறு பேஷன் நிகழ்ச்சிகள் நடத்த கடன் பெற்றதாகவும், கணவரிடம் கருத்து வேறுபாடு காரணமாக இதுகுறித்து அவரிடம் கூறாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், சான் ரேச்சல் அறையில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், ‘தனது மரணத்துக்கு கணவரோ, மாமியாரோ காரணம் இல்லை’ என சான் ரேச்சல் எழுதி வைத்து உள்ளார். தற்கொலை செய்து கொண்டுள்ள சான் ரேச்சல், மிஸ் புதுச்சேரி 2020, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, குயின் ஆப் மெட்ராஸ் 2022, 2023 மிஸ் ஆப்ரிக்கா (கருப்பழகி பட்டம்), கோல்டன் இந்தியா போட்டியில் இரண்டாவது இடம் என பல விருதுகளை பெற்றுள்ளார். மேலும் மாடலிங் துறைக்கு வரும் பெண்களுக்கு பயிற்சியும் அளித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.