Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூக்கம் வரவில்லையா?!

இன்றைய வாழ்க்கையில் படுத்த உடனே யாருக்கும் தூக்கம் வந்து விடுவதில்லை. படுத்த ஒருவன் தூங்கிவிட்டால் அவன் தான் இந்த உலகிலேயே நிம்மதியான மனிதன். இரவு சாப்பிட்ட பின் படுக்கைக்கு செல்கிறோம். உடனே நமது மனம் அன்றைய நிகழ்ச்சிகளை, அன்று நிகழ்ந்த கசப்பான சம்பவங்களை, நம்மைச் சுற்றியுள்ள பிரச்னைகளை அசை போடத் தொடங்குகிறது! இப்படி ஆகி விட்டதே…! இப்படி ஏமாந்துட்டோமே! இனி என்ன செய்யப்போகிறோம்? என்றெல்லாம் - எண்ணி எண்ணி கவலைப்படுவோம். இந்த கவலைகள் மனதை ஆக்கிரமித்துக் கொள்ளுகையில் கண்கள் மூடிக் கொண்டிருந்தாலும் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்போம். தூக்கம் வரவே வராது.கண்களை மூடும் முன் நாம் நம் மனதை மூட வேண்டும். தூங்க வேண்டும் என்ற நினைப்பை தவிர மற்ற எதையும் மனதில் போட்டுக் கொள்ளக் கூடாது. மனது எந்த சிந்தனைகளும் இல்லாது வெறுமையாக இருக்க வேண்டும்.மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளை நினைத்துக் கொண்டிருந்தால் தூக்கம் நிச்சயம் வரவேவராது. விடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வரவேண்டும்.ஊருக்குப் போக வேண்டும். அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும் என்ற நிலைமை இருந்தால் அவைகளைப் பற்றியும் கவலைப்படாமல் முதல் நாள் இரவு சீக்கிரம் தூங்கி விட வேண்டும். அப்போது அதிகாலைக்குள் முழிப்பு வந்துவிடும்.

தூக்கம் வராமல் தடை செய்வது நினைவுகள் மட்டுமல்ல… நாம் சாப்பிடும் இரவு உணவும் காரணமாகி விடும். இரவு சாப்பிடும் போது எளிதில் ஜீரணம் கொடுக்கும் எளிய, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி அல்லது சிறிதளவு சாதம் எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு அசைவ உணவு வகைகள் சாப்பிடுவதையும், வயிறு முட்ட சாப்பிடுவதையும் அறவே தவிர்க்க வேண்டும். இவை இரவு தூக்கத்தின் முக்கிய எதிரிகள். எளிதில் ஜீரணமாகாத இந்த உணவு வகைகள் வயிற்றில் பொருமல், அஜீரணத்தை ஏற்படுத்தி இவை தூக்கத்தை தடை செய்துவிடும்.தூங்குவதற்கு முன் நமக்குப் பிடித்த புத்தகத்தைப் படிப்பது, இரவில் கேட்கத் தகுந்த இனிய பாடல்களைக் கேட்பது. இவைகள் உங்களுடைய தூக்கத்திற்கு துணை தருபவைகளாகும். தூங்குவதற்கு முன் நாளைய நிகழ்ச்சிகளை… எதிர்காலத்தையெல்லாம் சிந்தித்துக்கொண்டிருக்கக் கூடாது. மாறாக என்றோ சிறு வயதில் நடந்த இனிய அனுபவங்களை அசைபோட்டுக் கொண்டிருங்கள். தங்களுடைய இஷ்ட தெய்வத்தைப் பற்றிய பாடல் வரிகளை மனதிற்குள் பாடிக்கொண்டிருங்கள். தூக்கம் தன்னாலே உங்களை வந்து தழுவிக்கொள்ளும்!

இவ்வளவு செய்தும் உங்களுக்கு தூக்கம் வர வில்லை என்றால் உங்களுக்கு “இன் சோம்னியா” என்கிற தூக்கம் வராத வியாதி இருக்கலாம். இதற்கு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.மொபைல், டிவி, கணினி போன்ற எலக்ட்ரானிக் திரைகளை ஒருமணி நேரம் முன்பு ஓரம் கட்டுங்கள். குடும்பத்தாருடன் அமர்ந்து பேசத் தொடங்கினாலே பாதி மனக்குறைகள் நீங்கி தூக்கம் எளிதில் வரும். அம்மாவின் மடியில் சிறிது நேரம் இளைப்பாறி, அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தாலே பல பாரங்கள் இறங்கி மனம் லேசாகி தூக்கம் தானாக வரும். குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிடுங்கள். தினமும் காலையில் சிறிது தூரம் நடை, சின்னச் சின்ன உடற்பயிற்சிகள், நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கம், உணவில் காய்கறிகள், பழங்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளுதல் இவையும் கூட சுலபமாக தூக்கம் வரவழைக்கும். நண்பர்கள் அவசியம்தான், ஆனால் தூக்கத்தைக் கெடுத்து வாரந்தோறும் மது, இரவு முழுக்க பார்ட்டி என்றிருக்கும் நண்பர்களை பகலில் மட்டும் சந்தியுங்கள். பார்ட்டிகள், விருந்துகள் எல்லாம் மாதம் ஒருமுறை என மாற்றிக்கொள்ளுங்கள். தூக்கம் தானாக வரும்.

இக்கட்டுரை படிக்கும்போதே கொட்டாவி வருகிறதா? உடனே படுக்கைக்கு போங்கள்…! நல்லா தூங்குங்க! குட்நைட்!

- த. சத்தியநாராயணன்