*நெல்லை கருத்தரங்கில் வக்கீல்கள் கருத்து
நெல்லை : அடிமைகளாக நடத்தும் வேலையை ஒன்றிய பாஜ அரசு சட்டத்தின் மூலம் செய்கிறது என நெல்லையில் நடந்த கருத்தரங்கில் வக்கீல்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் புதிய கிரிமினல் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதனை எதிர்த்து நெல்லை வக்கீல்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம், சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். தொடர்ந்து 1ம் தேதி முதல் கால வரையறையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் நெல்லை வக்கீல்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வருகிற 30ம் தேதி புதிய கிரிமினல் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் வக்கீல்களின் போராட்டத்தில் நெல்லை வக்கீல்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கருத்தரங்கு நேற்று நடந்தது. திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்த இந்த கருத்தரங்கில் அச்சங்கத்தின் தலைவர் ராஜேஸ்வரன் தலைமை வகித்து பேசினார். வாசுதேவநல்லூர் முன்னாள் எம்எல்ஏவும், வக்கீலுமான கிருஷ்ணன், வக்கீல்கள் அன்பழகன், செந்தில்குமார், முகைதீன் ஆகியோர் கருத்தரங்கில் பேசினர். திருநெல்வேலி வழங்கறிஞர்கள் சங்க செயலாளர் மணிகண்டன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வக்கீல்கள் பேசியதாவது: இந்தியன் பீனல் கோட் சட்டம் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. அதை ஏன் நாம் பின்பற்ற வேண்டும் என ஒன்றிய பாஜ அரசு தெரிவிக்கிறது. அந்த சட்டம் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டதுதான். ஆனால் இந்தியாவின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று இந்த மக்களின் சமூக அமைப்புக்கு ஏற்ப சட்டம் உருவாக்கப்பட்டது. அந்த சட்டத்தை அப்படியே நகல் எடுத்து சில இடங்களில் மாற்றங்களை செய்து புதிய கிரிமினல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதிலும் தெளிவு இல்லை.
அதனால் தான் அந்த சட்டம் எதிர்க்கப்படுகிறது. புதிய கிரிமினல் சட்டத்தில் உரிமைக்காக போராடுபவர்களுக்குக்கூட தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டவர் என ஆயுள் தண்டனை வழங்க வழிவகை செய்கிறது. சட்டங்களை குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையாக்க வேண்டும். ஆனால் அதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக்கூடாது.
நமது இந்தியச் சட்டம் அடிப்படையில் குற்றவாளிகளின் உரிமையை பாதுகாக்கும் சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக அனைத்து அதிகார பலமும் பொருந்திய அரசு வழக்கை நடத்துகிறது. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு தனிநபர். அவர் தரப்பு நியாயங்களை நீதிமன்றத்தில் வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால் புதிய கிரிமினல் சட்டங்கள் அந்த உரிமையை பறிக்கின்றன. அடிமைகளாக நடத்தும் வேலையை பாஜ அரசு சட்டத்தின் மூலம் செய்கிறது.’’ என்றனர். முடிவில் திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்க உதவிச் செயலாளர் முத்துராஜ் நன்றி தெரிவித்தார்.