டாஸ்மாக் பணியாளர்கள் மீது எடப்பாடி அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: டாஸ்மாக் பணியாளர் சங்கம் கண்டனம்
சென்னை: ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் வணிக சின்னமாக விளங்கும் எடப்பாடி பழனிசாமி டாஸ்மாக் பணியாளர்கள் மீது அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்செங்கோடு பரப்புரை கூட்டத்தில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் டாஸ்மாக் குறித்து விசாரிக்கப்படும் என பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசு, கடந்த 2003ம் ஆண்டு முதல் சில்லரை மதுபான வியாபாரத்தை தொடங்கியது. இந்த மதுபான வியாபாரத்துக்காக 30 ஆயிரம் பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த பணியாளர்களாக பணி அமர்த்தப்பட்டனர். 22 ஆண்டுகள் பணித் தொடர்ச்சி கொண்ட டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்து கொடுக்காமல், பணி நிரந்தரம் செய்து, கால முறை ஊதியம் வழங்கி, முறைகேடுகளுக்கான வழிகளை அடைத்து ஒழுங்கு முறைப்படுத்தாமல், எந்த வரைமுறையும் இல்லாமல், 15 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பகல் கொள்ளை அடித்தவர்கள் யார், யார் என்பது ஊரறிந்த ரகசியம். பத்து ரூபாய் என்றால் அது அதிமுக ஆட்சியின் அடையாளம் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
மதுப்பாட்டிலுக்கு தலா ரூ.10 கூடுதலாக வசூலித்து, அந்த மதுப்பாட்டில் திரும்ப வரும் போது, வசூலிக்கப்பட்ட ரூ.10-ஐ, மது நுகர்வோருக்கு திரும்ப வழங்கி வருவதையும் எடப்பாடி முடிமறைத்து பேசுவது, பணியாளர்களை அவமதிக்கும் செயலாகும். அதிமுக ஆட்சி காலத்தில், உரிமம் இல்லாமல், சட்ட விரோத மதுக்கூடங்கள் ஏராளமாக செயல்பட்டது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அனைத்தும் விசாரணையில் உள்ளன. இந்த உண்மைகளை மறைத்து பழனிசாமி பேசி வருவது வேதாளம் ஓதும் வேதம் என்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள். ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் வணிகச் சின்னமாக விளங்கும் அதிமுக பொதுச் செயலாளர் டாஸ்மாக் பணியாளர்கள் மீது அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.