*விவசாயம் பாதிக்கும் அபாயம்
*உடனடியாக அகற்ற வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள ஏரிகளில் ஆக்கிரமித்து படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளால், விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளதால், உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி நகரம் மற்றும் நகரையொட்டி உள்ள மக்களின் முக்கிய நீர் ஆதாரங்களாக, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சின்னஏரி, புதூர் கரீம்சாயபு ஏரி, தேவசமுத்திரம் ஏரி, பாப்பாரப்பட்டி ஏரி ஆகியவை உள்ளது. இந்த ஏரிகளில் பெரும்பாலும் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும். சின்ன ஏரியின் அருகே உள்ள மலையில் இருந்து மழை காலங்களில் வரும் தண்ணீர் சின்ன ஏரிக்கு வருகிறது.
கரீம் சாயபு ஏரிக்கு கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் மழைநீர், கழிவுநீர், தேவசமுத்திரம் ஏரிக்கு கிருஷ்ணகிரி நகரின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நிறைந்து விடுவதால் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இந்த ஏரிகளை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.
இந்த ஏரிகளில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தியும் அதிகளவில் ஏற்பட்டு, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள், பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
அத்துடன் இந்த ஆகாய தாமரை தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளதால், விவசாயம் பாதிக்கப்படும் என்பதால், விவசாயிகளும் நீர்நிலைகளில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவாக பெரும்பாலான நீர்நிலைகளில் ஆகாய தாமரை பச்சைபசேல் என பரவி கிடக்கிறது. இவை நீரை அதிக அளவில் உறிஞ்சி, நீர்நிலைகளின் தன்மையை அழித்துவிடும் என்பதால், அவற்றை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், ஆகாய தாமரையானது, தான் உயிர்வாழ தண்ணீரை எளிதில் ஆவியாக்கி, நீர்நிலையை வறண்டு போக வைத்துவிடும் தன்மை கொண்டது.
குளங்கள் மற்றும் நீர்நிலைகளை அழகுபடுத்துவதற்காக தென்அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட தாவரம் தான் ஆகாய தாமரை. அழகுக்கு வந்தது, தற்போது ஆபத்தை ஏற்படுத்துகிறது. இவை தண்ணீரை எளிதில் ஆவியாக்குவதால் குளம், குட்டைகள் விரைவில் வறண்டுவிடும். இதனால் இந்த ஆகாய தாமரைகள் நீர்நிலைகளுக்கு கெடுதல் விளைவிக்கும் தாவரமாகும்.
இந்த ஆகாய தாமரை அதிகளவில் படர்ந்து கொசுக்களுக்கு உறைவிடமாக மாறுகிறது. குறிப்பாக கொசுக்களுக்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையை ஆகாய தாமரை தருகிறது. இதனால் கொசுக்கள் காலை நேரங்களில் ஆகாய தாமரை படர்ந்துள்ள இடங்களை ஆக்கிரமிக்கின்றன. இரவு நேரங்களில் மனிதர்களின் வசிப்பிடத்திற்கு சென்று, மலேரியா, டெங்கு போன்ற பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
எனவே, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆகாய தாமரையை முற்றிலும் அகற்ற வேண்டும். நீர்நிலைகள் மாசு ஏற்பட்டு, தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்ட ஆகாய தாமரை செடிகளால் ஏற்படும் அபாயத்தில் இருந்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சின்னஏரியில் அதிகளவில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
