Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சருமம் சொல்வதைக் கேளுங்கள்!

நம் உடலில் நடக்கும் எவ்வித மாற்றங்களானாலும் அதற்கான அறிகுறிகளை முதலில் எடுத்து வைப்பது நம் சருமம்தான். குறிப்பாக முகச்சருமம். சருமப் பிரச்னைகளில் பருக்கள் மிகவும் பொதுவானவை. ஆனால் எல்லா பருக்களும் ஒரே மாதிரியானவை அல்ல. குறிப்பாக ஹார்மோன் காரணமாக ஏற்படும் பருக்கள் மற்றும் பருவ வயதில் தோன்றும் பருக்கள் இரண்டிற்கும் இடையே தெளிவான வேறுபாடுகள் இருக்கும்.

பருவ வயது பருக்கள்! (Teenage Acne)

பொதுவாக பருவ வயது பருக்கள் (Teenage acne) என்பது 13 வயது முதல் 19 வயது வரையிலான இளம்வயதினரிடையே அதிகமாக காணப்படும். சிலருக்கு இது 11 அல்லது 12 வயதிலேயே ஆரம்பிக்கலாம் - குறிப்பாக உடலில் பருவ மாற்றம் (puberty) தொடங்கும் நேரத்திலேயே பருக்கள் உண்டாகும்.பெண்களிடம் மாதவிடாய் தொடங்கும் காலத்தைச் சுற்றி பருக்கள் தோன்றலாம். ஆண்களில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிக்கும் காரணமாக முகம், முதுகு, மார்பு பகுதியில் பருக்கள் உருவாகும்.பொதுவாக இந்த பருக்கள் 18 அல்லது 19 வயதுக்குள் குறைந்துவிடும். ஆனால் சிலருக்கு ஹார்மோன் சமநிலையின்மை, அதிக எண்ணெய் தோல், அல்லது தவறான skin care முறைகள் காரணமாக 20-25 வயதுவரை நீடிக்கலாம்.

பருவ பருக்கள் தொடங்கும் வயது: 11-13

அதிகமாக காணப்படும் வயது: 14-18

முடியும் சராசரி வயது: 19-20 (சிலருக்கு 25 வரை நீடிக்கும்)

நெற்றி, மூக்கு, கன்னம், முதுகு போன்ற இடங்களில் சிறிய வெள்ளை அல்லது கருப்புப் புள்ளிகள் உருவாகின்றன. அவை வலியில்லாமல் இருந்தாலும் தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். பருவம் முடிந்ததும் இவை இயல்பாக குறையும். பதின் பருவ பருக்களைக் குறைக்க அதீத ஆயில் உணவுகளை தவிர்த்தல் அடிக்கடி முகத்தை நல்ல ஃபேஸ் வாஷ் கொண்டு சுத்தம் செய்து அழுக்கில்லாமல் பராமரிக்க டீனேஜ் பருக்கள் பிரச்னை நீங்கும். மேலும் முகத்தை பொலிவாக்கும் இயற்கை மாஸ்க்கள், அல்லது ஷேட் மாஸ்க்கள் என முயற்சி செய்து பார்க்கலாம்.

ஹார்மோன் பருக்கள்! (Hormonal Acne)

இந்த வயதுதான் என்றில்லை, எந்த வயதிலும் தோன்றும் பருக்கள் இவை. குறிப்பாக 30 வயதைக் கடந்த பின் இந்த ஹார்மோன் பிரச்னைகளை வரும். ஹார்மோன் பருக்கள் பெரும்பாலும் பெண் களில் மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம், மன அழுத்தம், போன்ற காலங்களில் தோன்றும். உடலின் ஹார்மோன் நிலைகள் மாறும்போது தோலில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்து துவாரங்கள் அடைபடும். இதனால் முகத்தின் கீழ்பகுதிகளில், குறிப்பாக தாடை, கன்னத்தின் கீழ், கழுத்துப் பகுதிகளில் ஆழமாகவும் வலியுடனும் இருக்கும் சிவப்பான கடினமானவையாக உருவாகும். இது ஒருமுறை போய் மீண்டும் அதே இடத்தில் தோன்றும் தன்மையுடையது.

இரண்டிற்கும் இடையே வேறுபாடு என்னவென்றால், ஹார்மோன் பருக்கள் பெரும்பாலும் 20 வயதுக்கு மேல் பெண்களிடம் காணப்படும்; ஆனால் பருவப் பருக்கள் 13 முதல் 19 வயதினரிடம் பொதுவாக காணப்படும். ஹார்மோன் பருக்கள் தாடை மற்றும் கழுத்துப் பகுதியில் வலியுடன் தோன்றும்; பருவ பருக்கள் முகத்தின் மேல் பகுதியில் சிறிய முளைகளாக தோன்றும். ஹார்மோன் பருக்கள் மாதவிடாய் முன் மீண்டும் மீண்டும் தோன்றும்; ஆனால் பருவ பருக்கள் சில வருடங்கள் நீடித்து பின்னர் தணியும்.

இதைத் தடுக்க உடலின் சமநிலையை பராமரிப்பது முக்கியம். மனஅழுத்தத்தை குறைத்து போதுமான தூக்கம் எடுப்பது ஹார்மோன் நிலைகளை சீர்படுத்த உதவும். பால், சர்க்கரை மற்றும் எண்ணெய் பொருட்களை குறைத்து பழம், காய்கறி, தண்ணீர் அதிகம் உட்கொள்வது நல்லது. மிதமான உடற்பயிற்சி ஹார்மோன் சீர்திருத்தத்துக்கு துணைபுரியும். முகத்தை சல்ஃபேட் இல்லாத வாஷ் கொண்டு தினமும் இருமுறை சுத்தம் செய்து, எண்ணெய் பிசுபிசுப்பு இல்லா மாய்ஸ்ச்சுரைசர் மற்றும் சன் ஸ்க்ரீன் பயன்படுத்தலாம்.

பருவ பருக்கள் வராமல் இருக்க pillow cover, towel போன்றவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும். முகத்தில் எண்ணெய் சேராமல் பார்த்துக்கொள்வதும், கை வைத்து பருக்கைகளைஅழுத்தாமல் இருப்பதும் அவசியம். பருக்கள் நீண்ட நாட்களாக மாறாமல் இருந்தால், அது உடல்நிலை சிக்கலாக இருக்கக்கூடும். மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.பருவப் பருக்கள் தற்காலிகமானவை. ஆனால் ஹார்மோன் பருக்கள் உடல் உள் சமநிலையை வெளிப்படுத்தும். ஒரு சிக்னல் போன்றவை. சீரான உணவு, தூக்கம், மனநிலை, மற்றும் இயற்கை தோல் பராமரிப்பு வழிமுறைகள் ஆகியவை இந்த இரு வகையான பருக்குகளையும் கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹார்மோன் பருக்கள் உங்கள் உடல் நலம் சீராக இல்லை என்பதை எச்சரிக்கும் ஒரு அறிகுறி. குறிப்பாக உடல் பருமன், தைராய்டு, சர்க்கரை, இரத்த அழுத்தம் என அனைத்திற்குமான முதல் அலார மணி இந்த ஹார்மோன் பருக்கள்தான். இவை உடன் கழுத்து கருப்புப் பட்டைகள், சரும தழும்புகள், சீரற்ற மாதவிடாய், படிக்கட்டில் ஏறும் போது மூச்சுத் திணறல் உள்ளிட்டவற்றை அடுத்தடுத்து கொண்டு வரும்.

- ஷாலினி நியூட்டன்