சென்னை: தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி குழுமம், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து சென்னையில் நேற்று தென்மண்டலத்திற்கான திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு பயிலரங்கை நடத்தினர்.
தொழிற்கல்வி மற்றும் பயிற்சி சூழலை வலுப்படுத்துவதற்காக தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி குழுமத்தின் முன்முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் திறன் மேம்பாட்டின் கீழ் தங்கள் மாநிலத்தின் முன்முயற்சிகள் பற்றி இப்பயிலரங்கில் எடுத்துரைத்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி பேட்டியளிக்கையில், ‘‘தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டுகொண்டிருக்கும் நான் முதல்வன் திட்டம் பற்றி எடுத்துரைத்தோம். அனைவரும் நம்முடைய செயல் திட்டங்களை பாராட்டியுள்ளனர். அதேபோல் அவர்கள் மாநிலத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்கள். சிறப்பான செயல்திட்டங்களை ஒரு மாநிலத்தை பார்த்து இன்னொரு மாநிலம் கற்றுக்கொள்வதற்கு இந்த கருத்தரங்கம் மிகவும் உதவியாக உள்ளது’’ என்றார்.
சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி குழுமத்தின் செயற்குழு உறுப்பினர் வனிதா அகர்வால், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் ஸ்ரீஜெயந்த் சவுத்ரி, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் வீர ராகவ ராவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி, நான் முதல்வன் திட்டத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெயப்பிரகாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.