அச்சிறுப்பாக்கம் அருகே 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோயில் சிதிலமடைந்து பொலிவிழந்த அவலம்: புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய கோரிக்கை
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த பெரும்பேர்கண்டிகை மலை குன்றின் மீது சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. 10ம் நூற்றாண்டில் 224 படிக்கட்டுகளுடன் மலைக்குன்றின் வள்ளி தெய்வானை உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் சோழர்களால் கட்டப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியது, பாமன் சுவாமிகள் பாடல் பாடியது, அகஸ்தியருக்கு காட்சி கொடுத்தது, சித்தர்கள் பூஜை செய்த ஸ்தலம் என இக்கோயிலுக்கு சிறப்பம்சங்கள் நிறைய உள்ளன. மேலும் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழாவில் சூரபத்மனை வதம் செய்த வேலுக்கு எங்குமே இல்லாத அளவிற்கு இங்கு அபிஷேகம் செய்வது மேலும் ஒரு சிறப்பம்சமாக உள்ளது. இந்தநிலையில் இக்கோயிலின் மூலவர் சன்னதியின் மேல் புற சுவர்களும், சுற்று சுவரும் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது.
கோயில் மீதுள்ள விமானங்களும் சிலைகளும் பொலிவிழந்து காணப்படுகிறது. இதனால் காண்பதற்கே பரிதாபமான நிலையில் இக்கோயில் உள்ளது. இக்கோயிலை நன்கொடையாளர்களின் நிதியுதவியுடன் சீரமைப்பதற்காக பக்தர்கள் முயற்சி மேற்கொண்டு இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளிடம் கடிதம் வழங்கியுள்ளனர். இக்கடிதம் வழங்கி சில ஆண்டுகள் ஆகியும் அனுமதி வழங்கப்படவில்லை என்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் இக்கோயிலின் அருகில் உள்ள ஆட்சீஸ்வரர் கோயில், தான்தோன்றீஸ்வரர் கோயில், மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில், வெண்காட்டீஸ்வரர் உள்ளிட்ட கோயில்கள் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்து முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கவில்லை. எனவே இந்த சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலையும் திருப்பணி செய்ய நன்கொடையாளர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்செந்தூருக்கு நிகர்
திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார வேல் இருக்கும், இங்கு சத்ரு சம்ஹார இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அதனாலேயே திருச்செந்தூருக்கு நிகரான ஸ்தலமாக இக்கோயில் திகழ்ந்து வருவதால் ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமை
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பெரும்பேர் கண்டிகை கிராமத்தில் இயற்கை அழகுடன் கூடிய குன்றின் மீது 6 ஏக்கர் பரப்பளவில் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் என்பதால் பொலிவிழந்து காணப்படுகிறது. இதனால் பக்தர்களின் வருகையும் குறைந்துள்ளது. எனவேவே இக்கோயிலை விரைவாக சீரமைத்து குடமுழக்கு செய்து பக்தர்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலைத்துறைக்கு கோரிக்கை எழுந்துள்ளது.
தெற்கில் சன்னதி
தமிழ்நாட்டில் பெரும்பாலான கோயில்களின் மூலவர் சன்னதிகள் கிழக்கில் அமைந்திருக்கும். ஆனால் எங்குமே இல்லாத வகையில் இக்கோயிலில் வள்ளி தெய்வானையுடன் சிவசுப்பிரமணிய சுவாமி மூலவர் சன்னதி தெற்கு திசையை நோக்கியபடி அமைந்துள்ளது.


