விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் ‘அதிமுக - விருதுநகர் மாவட்டம்’ என்ற பெயரில் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘சிவகாசி சப்-ரிஜிஸ்டர் செந்தில் ராஜ்குமார், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பணியாற்றும் சப்-ரிஜிஸ்டர் சுரேஷ்கண்ணன் மற்றும் விருதுநகரில் பணிபுரிந்த பத்திரப்பதிவு துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் விருதுநகர் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் இல்லாத மனைகளை பணம் வாங்கிக்கொண்டு பதிவு செய்து கொடுப்பதாகவும், இவர்கள் பல கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு பினாமி பெயர்களில் சொத்துக்களை குவித்து வருவதாகவும், இவர்கள் மீது இதுவரை ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் பதிவுத்துறை தலைவரே ஊழல்வாதியாக இருந்தால் ஊழலை எவ்வாறு ஒழிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்களால் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட பதிவாளர் கந்தப்பனிடம் கேட்டபோது, விருதுநகர் மாவட்டப் பதிவாளராக ஒரு வாரத்திற்கு முன் பொறுப்பேற்று இருப்பதாகவும், சென்னை அலுவலக மீட்டிங்கில் இருப்பதாகவும், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
