சிவகாசி : வெளியூர் செல்லும் பயணிகள் தங்களது இருசக்கர வாகனங்களை சிவகாசி பேருந்து நிலையத்தின் உட்புறம் ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் செல்வதால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.சிவகாசி பேருந்துநிலையமானது இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவில்பட்டி, திருச்செந்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பல்வேறு கிராமங்களில் இருந்து தினந்தோறும் வரும் மக்கள் தங்களின் அத்தியாவசியப் பொருட்களை சிவகாசியில் வாங்கிச் செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் சிவகாசியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் தங்களது இருசக்கர வாகனங்களை இந்த பேருந்து நிலையத்தின் உட்புறம் ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும் பேருந்துகள் நிற்க இடம் இல்லாததால் பேருந்துநிலையத்தின் மைய பகுதியில் நின்று பேருந்துகள், பயணிகளை ஏற்றி செல்கின்றன. மேலும் பேருந்துகளை திருப்ப முடியாமல் ஓட்டிநர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பேருந்து நிலையத்தை விட்டு வெளியில் வருவதற்குள் ஓட்டுநர்களுக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது. தினமும் போராட்டமாக இருப்பதாக ஓட்டுநர்கள் புலம்புகின்றனர். பயணிகளும் நடமாட சிரமப்படுகின்றனர்.
பேருந்துகள் வெளியே செல்லும் பாதையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால் பேருந்துகள் வெளியே செல்ல சிரமப்படுகின்றன. பேருந்து நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் பயணிகள்,
பேருந்து வரும் வரை அமர்ந்து செல்ல போதிய இருக்கை வசதி இல்லை. இதனால் மணிக்கணக்கில் நின்று கொண்டே பேருந்திற்காக காத்திருந்து செல்ல வேண்டி உள்ளது. ஆகையால் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் டூவீலர்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.