சிவகங்கை : சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் 220 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் காளிராசா, செயலர் நரசிம்மன் தெரிவித்ததாவது:
சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள பெரிய தெப்பக்குளத்தின் கிழக்குப் பகுதியில் தண்ணீர் வரத்து மடையின் கட்டுமான மேல்பகுதியில் கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டு தெப்பக்குளத்திற்கு மேல் பாதிப் பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கற்பாதை அமைத்த செய்தியைக் கூறுகிறது.
தெப்பக்குளம் செம்பூரான் கல்லால் நான்கு பகுதிகளிலும் அகலமான படிக்கட்டுகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த தெப்பக்குளத்தில் ஐந்து இடங்களில் தண்ணீரை இறைக்கும் கமலை போடுவதற்கான கால்களும் நீட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் இது விவசாய தேவைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. கல்வெட்டு ஐந்து வரிகளில் எழுதப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடப்படும் சாலிவாகன சகாப்த ஆண்டின்படி 1805ல் குரோதன வருஷம் ஐப்பசி மாதம் 12ம் தேதி மேல் பார்த்தி பகுதியில் இருந்து வரும் வரத்துக் கால்வாய் தெப்பக்குளத்தில் உள்நுழையும் இடத்தில் முத்து விஜயரெகுநாத கௌரிவல்லப பெரிய உடையாத்தேவர் அறச்செயலாக கற்பாதை அமைத்துக் கொடுத்ததை தெரிவிக்கிறது. இதே பகுதியில் மற்றொரு கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டது.
சிவகங்கை அருகே உள்ள சித்தாலங்குடியில் மகாராஜா கோவில் உள்ளது. இது சிவகங்கையின் முதல் ஜமீன் கௌரி வல்லப மகாராஜாவிற்காக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் வழிபட்டு வேங்கைப்புலி வேட்டைக்குச் சென்ற இரண்டாம் போதகுரு ராஜா பிரான்மலையில் புலி சுட்டு குத்தினதற்காக படமாத்தூர் கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்டியுள்ளார்.
அதே மன்னர் நேர்த்திக் கடனுக்காக முத்துப்பட்டியில் உள்ள மகாராஜா கோவிலுக்கு திருப்பணி செய்ததை 1861 துன்மகி ஆண்டு பிரான்மலையில் வேங்கைப் புலி சுட்டு குத்தின பிரார்த்தனைக்காக மகாராஜா போதகுரு திருப்பணியை செய்தார் என இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.