Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சித்தோட்டில் பெண் குழந்தை கடத்தல் வழக்கு தடயங்கள் கிடைக்காமல் தனிப்படை தவிப்பு

பவானி : சித்தோட்டை அடுத்த லட்சுமி நகர், கோணவாய்க்கால் பிரிவில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை பாலத்துக்கு அடியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஷ்- கீர்த்தனா தம்பதியின் ஒன்றரை வயது பெண் குழந்தை, பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, கொசு வலையை அறுத்து கடத்தப்பட்டது.

இத்துணிகர சம்பவம் கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவில் நடைபெற்றது. மர்ம நபர் ஒருவர் குழந்தையை எடுத்துச் செல்வதை அவ்வழியே வெங்காய பாரம் ஏற்றிச்சென்ற லாரியின் டிரைவர் பார்த்துள்ளார்.

ஆனால், சிசிடிவியில் மர்ம நபரை அடையாளம் காணும் அளவிற்கு பதிவாகவில்லை.குழந்தை கடத்தல் சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், பவானி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ரத்தினகுமார் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மூன்று சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 12-வது நாளாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

300-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டும், குழந்தை கடத்தல் தொடர்பான தகவல் கிடைக்கவில்லை. கடத்தப்பட்ட குழந்தை மற்றும் கடத்தல் கும்பல் குறித்து காவல்துறைக்கு சரியான தகவல் கிடைக்காமல் தனிப்படை போலீசார் தவித்து வருகின்றனர்.

இதனால், குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் நபர்களின் பெயர், விலாசம் உள்ளிட்ட ரகசியங்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், குழந்தை மற்றும் கடத்தல் கும்பல் குறித்த தகவலை தெரிவிக்க தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தோடு போலீஸ் நிலையம்: 94981 01226, பவானி டிஎஸ்பி: 94981 70099, சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர்: 94981 03757, பவானி டிஎஸ்பி அலுவலகம்: 94981 01221, ஈரோடு எஸ்பி அலுவலகம்: 94981 01210 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.