Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரதட்சணை கேட்டு மாடியில் இருந்து தள்ளிவிட்ட எஸ்ஐ மகன்: காயங்களுடன் ஆம்புலன்சில் வந்து கலெக்டரிடம் மனைவி புகார்

வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு வேலூர் சதுப்பேரியைச் சேர்ந்த நர்கீஸ்(21) என்பவர் ஆம்புலன்சில் வந்தார். அவர் கலெக்டரிடம் கொடுத்த மனு விவரம் வருமாறு: எனது சொந்த ஊர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்நெல்லி கிராமம். நான் பிஎஸ்சி படித்துள்ளேன். எனக்கும் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள பிரம்மதேசம் காவல் நிலையத்தில் எஸ்ஐ ஆக பணிபுரிபவரின் மகன் காஜாரபிக்கிற்கும் 2023ல் திருமணம் நடந்தது.

அப்போது எனது பெற்றோர் 30 பவுன் நகை, பைக் வாங்க கணவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், 500 கிராம் வெள்ளிப்பொருட்கள், ரூ.3 லட்சம் மதிப்பில் சீர்வரிசை மற்றும் திருமண செலவு ரூ.6 லட்சம் கொடுத்தனர்.

நான் குறைவான நகை போட்டு வந்ததாக கூறி கணவர் குடும்பத்தினர் துன்புறுத்தி வந்தனர். எனக்கு சரியான சாப்பாடு வழங்கவில்லை. இதுகுறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். இரு குடும்பத்தினரும் கடந்த டிசம்பர் மாதம் பேசி சமாதானம் செய்தனர்.

சில நாட்களில் மீண்டும் எனது கணவர் ரூ.10 லட்சமும், பெற்றோர் வசிக்கும் வீட்டை அவரது பெயருக்கு எழுதி வைக்கும்படியும் கொடுமைப்படுத்தினார். என் மாமனார் வீட்டில் பிரச்னை ஏற்பட்டு, என்னையும், கணவரையும் வேலூர் சதுப்பேரியில் தனிக்குடித்தனம் வைத்தனர். அதன்பிறகும் என்னை தனியாக வீட்டில் வைத்து பூட்டிசெல்வார். கடந்த மாதம் 3ம் தேதி எனது கணவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினார். மேலும் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து என்னை கீழே தள்ளி கொலை செய்ய முயற்சித்தார். இதில் எனக்கு இடுப்பு, இரண்டு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு நகரக்கூட முடியாமல் கதறினேன். அக்கம் பக்கத்தினர் வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுதொடர்பாக அரியூர் போலீசில் புகார் அளித்தேன். அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதுவரை தனியார் மருத்துவமனையில் ரூ.6 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். கணவர் உள்பட யாரும் என்னை வந்து பார்க்கவில்லை. எனவே கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து, துன்புறுத்தி, கொலை செய்ய முயற்சி செய்த கணவர், மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தொடர்ந்து கலெக்டர் சுப்புலட்சுமி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.