Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுமலை தேனும்... அனந்தப்பூர் அத்தியும்...மதிப்புக்கூட்டலில் சாதிக்கும் வாடிப்பட்டி விவசாயி!

``அத்திப்பழம் ஒரு ஏக்கர்ல போட்டிருக்கேன். முதல் வருசம் 100 கிலோதான் விளைஞ்சது. ரெண்டாவது வருசம் 500 கிலோ. இப்போ மூனாவது வருசம் 3 டன் கிடைச்சிருக்கு” எனப் படிப்படியான வளர்ச்சியை உற்சாகமாக சொல்லத் தொடங்கினார் பாலகிருஷ்ணன். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தேதூர் கிராமத்தில் 3 ஏக்கரில் இயற்கை வேளாண்மை செய்யும் இவர் அத்திப் பழத்தை விளைவித்து ஜாம், தேன் அத்தி என மதிப்புக்கூட்டி விற்பனை செய்து நல்ல லாபம் பார்க்கிறார். அவரை நாம் சந்தித்தபோது பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “வழக்கமான காய்கறி, தானியம்னு இல்லாம புதுசா ஏதாவது விளைவிக்கணும்ன்னு ஆர்வத்தோட பல ஊர்களுக்குப் போய் அங்க விளையுறத பத்தி தெரிஞ்சிப்பேன். அப்டி ஆந்திரா நாகலாபுரம் போனப்ப, ஒரு விவசாயி 6 ஏக்கர்ல அத்திப்பழம் விளைவிச்சு அவரே உலரவச்சி விக்கிறத பார்த்தேன்.

நல்லா லாபம் வருதுன்னு அவர் சொன்னார். இதை நம்ம ஊர்ல விளைவிக்கணும்னு ஆசைப்பட்டேன். இது டயானா ரகம். ஒரு கன்னு 35 ரூபான்னு அனந்தப்பூர்லர்ந்து 500 கன்னு வாங்கினேன். ஒருமாசம் கன்னை தயார் செய்தேன். அதை ரெண்டடிக்கு ரெண்டடி குழி தோண்டி, அதுல மண்புழு உரத்தையும், “வேம்”மையும் கலந்து போட்டு, குழியை மூடிடணும். அப்புறமா கையால மேலோட்டமா தோண்டி கன்னை வைக்கணும். ஏன்னா, மண் பொதுபொதுப்பா இருந்தாத்தான் வேர்புடிக்க சுலபமா இருக்கும். இந்த அத்திப்பழம் நம்ம தட்பவெப்பத்துக்கு ஆந்திரா அளவுக்கு நல்லா வராது. அப்டினாலும் நல்லா பராமரிச்சா ஏக்கருக்கு 1 டன் வரைக்கும் விளையும்” என விளக்கினார் அவர். “மழை இல்லாத குளிரான நவம்பர், டிசம்பர் ஜனவரியில வசந்த காலத்துல கன்னு வைக்கணும். சொட்டுநீர் பாசனம்தான் குடுக்கணும். அளவோட தண்ணி குடுக்கணும். அத்தி வளரும்போது தக்காலப்பூச்சி வரும். அதை விரட்ட அரிசி கழுவுற தண்ணியை மூனு நாட்கள் காத்துப்போகாம நொதிக்கவச்சி, அதை தெளித்தாலே போதும். குருத்துவெட்டுப் புழு வரும். அது வெயில்காலத்துல தானே செத்துடும். கன்னு வச்சி 5 மாசத்துல பழம் பழுக்கும். ஆக்சுவலா அத்தின்றதே பூதான். அதை பறவைகள் விரும்பித் தின்னுடும். அதனால மேல சுத்தி முழுசா பறவை வலை போடணும்” எனப் பராமரிப்பு பற்றிக் கூறினார்.

“பழத்தை தினமும் பறிக்கலாம். ஒன்னு விட்டு ஒருநாளும் பறிக்கலாம். பறிச்சதும் ஒரு நாள்ல பழம் கெட்டுடும்ன்றதால காலைல பறிச்சி உடனே உலர வைக்கணும். கம்பனில டிரையர் வாங்கினா 3 லட்சம் மேல ஆகும். அதுக்கு பதிலா நானே இயற்பியல் படித்தவன்றதால சொந்தமா குறைந்த செலவுல உலரவைக்கும் அமைப்பு, ஹீட்டரை செய்தேன். பகல்ல சோலார்ல காயும். இரவில் ஹீட்டரின் சூட்டில் காயும். இதுக்கு 60,000 ரூபாய் ஆச்சு. சரியா காயாட்டி பூஞ்சை புடுச்சிடும். அதிகமா காஞ்சிட்டா ரொம்ப கெட்டியாகிடும். ரொம்ப காயாமலும் சரியான பதத்துல எடுத்துடணும்” என முதல் கட்ட மதிப்புக்கூட்டலை விளக்கினார்.

“இந்த அத்தியில் நாம் `ப்ரிசர்வேட்டீவ்’ ஏதும் சேர்க்காததால், குளுமையான இடத்தில் வைத்து உண்ண வேண்டும் என வாடிக்கையாளரிடம் சொல்லிவிட வேண்டும். மிஞ்சும் அத்திப்பழங்களை 3 அடிக்கு 3 அடி மரப்பெட்டியில் ஏசி கருவிகளின் பாகங்களைக் கொண்டு நானே குளிர்பதன அறையை செய்து அதில் குளுமையாக வைத்திருக்கிறேன். எங்க ஊர் இருக்குறது சிறுமலை அடிவாரம் என்பதால் மலைத்தேன் எளிதா கிடைக்கும். மலைத்தேனில் பழம் மூழ்கும் வரை ஊறவைக்க வேண்டும். தினமும் கிண்டி, 90 நாட்கள் ஊறவைத்து தேன்அத்தியாக மதிப்புக்கூட்டி விற்கிறோம்” என்றார்.

அத்திப்பழ ஜாமும் செய்கிறார் பாலகிருஷ்ணன். ``இண்டர்நெட்ல பாக்கும்போது 300 கிராம் அத்திப்பழ ஜாம் 1000 ரூபாய்னு இருந்தது. அதனால நாமே ஜாம் செய்யலாம்ன்னு ஆர்ம்பிச்சேன். பழத்தை மிக்சியில் போட்டு கூழாக்கி, வடைசட்டியில் 5 மணி நேரம் சூடாக்க வேண்டும். மெதுவாகக் கிண்டவேண்டும். பிறகு நாட்டுச்சர்க்கரை சேர்த்து மீண்டும் 4 மணி நேரம் வரை மீண்டும் மெதுவாகக் கிண்டினால் ஜாம் உருவாகும்” என ஜாம் செய்யும் முறையை விளக்கினார்.``தேன் அத்தியை அரை கிலோ600 ரூபாய்க்கு விற்கிறோம். அத்தி ஜாமை 200 கிராம் 450 ரூபாய்க்கு விற்கிறோம். விற்கும் திறன் இருப்பவர்கள் மட்டும் அத்தி விவசாயம் செய்தால் வெற்றிகரமாக லாபகரமாக செயல்படலாம். இதுல முதலீடு அதிகம். வானிலை சார்ந்த ரிஸ்க்கும் அதிகம், லாபமும் அதிகம். அத்தியோட நெல்லிக்காய், முருங்கைக்காய் எல்லாம் விளைவிக்கறேன். விவசாயம்ன்றது எப்பவுமே தொடர்ந்து கத்துக்குற தொழில்தான். என் விளைபொருளை, மதிப்புக் கூட்டிய பொருட்களை நானே சந்தைப் படுத்தறேன். அதனால, மூன்றாம் ஆண்டு ஏக்கருக்கு 3 லட்சம் லாபம் கிடைத்தது’’ எனத் தெளிவான வழிகாட்டுதலை கூறினார் புதுமையை விரும்பும் விவசாயியான பாலகிருஷ்ணன்.

தொடர்புக்கு:

பாலகிருஷ்ணன்: 90476 14045