எஸ்ஐஆர் திருத்த பணிகளில் முகவர்களுக்குகூட ஆள் இல்லாமல் திணறும் பாஜ, அதிமுக: அமைச்சர் பி.கே.சேகர்பாபு சாடல்
தண்டையார்பேட்டை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ஏழுகிணறு பகுதியில் உள்ள அம்மன் கோயில் தெருவில் இன்று காலை அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு இட்லி, பொங்கல், வடை என பல்வேறு உணவுகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்து வரும் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சியின் 276வது நாளாக பொதுமக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம். பஞ்சாங்கத்தின் முறைப்படி திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். மேலும், 2021ம் ஆண்டு முதல்வருக்கு கட்டம் சரியில்லை, அவர் ஆட்சி அமைக்கவே முடியாது என்றும் பாஜவினர் கூறினர்.
ஆனால் மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆனார். அன்றிலிருந்து எதிர்த்து நிற்கின்ற அனைவருக்கும் தோல்வியை பரிசாக தந்து கொண்டிருக்கிறார். அதே போல 2026ம் ஆண்டும் எதிர்த்து நிற்கின்ற இதுபோன்ற துருப்பிடித்த பாஜ கூற்றுக்கும், பஞ்சாங்கத்தை மாற்றி காட்டக்கூடிய மதிநுட்பமும் கொண்டவர் எங்கள் முதல்வர். எஸ்.ஐ.ஆர் பணிகளின்போது தேர்தல் அதிகாரிகளை திமுகவினர் எப்படி மிரட்ட முடியும். அவர்கள் கட்சி பணிகளில் இல்லை. வாக்குச்சாவடி முகவர்களை தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் போட முடியவில்லை. பாஜகவினராலும் போட முடியவில்லை. மக்களுக்கு உதவுவதற்காக திமுக எப்போதும்போல் வாக்குரிமை பெற்று தருவதும் முன்னிலையில் உள்ளது.
நமது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. தமிழிசை சவுந்தரராஜன் போல், அவரது தந்தையார் மூலம் தகுதி கிடைக்கவில்லை. துணை முதல்வரின் உழைப்பால், அவருக்கு இந்த தகுதியை முதல்வர் தந்துள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுமென்றால் தந்தையின் பெயருக்காக பதவியை பெற்றிருக்கலாம். எங்கள் முதல்வர் துணை முதல்வரை களத்திற்கு கொண்டு வந்த நாள் முதல் இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் மற்றும் 5 லட்சம் புதிய இளைஞர்களை கொண்டு வந்தது என பல வகைகளில் பணியாற்றி வருகிறார்.


