சென்னை: வரைவு வாக்காளர் பட்டியல் மீது ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்ட பிறகே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. சென்னை தியாகராய நகர், தாம்பரம் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெறுள்ள இறந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், தகுதியற்றவர்கள் மற்றும் இரட்டை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, தி.நகர் முன்னாள் எம்.எல்.ஏ சத்தியநாராயணன் மற்றும் தாம்பரம் தொகுதியை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் விநாயகம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் எம்.கணேசன், ஜெ.எச்.இனியன் ஆஜராகி, இறந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வாதிட்டனர். அதற்கு, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் நடைபெறும். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிகள் நடைபெறும்.
தற்போது தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அக்டோபர் 27ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் நாளை (இன்று) முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் துவங்கப்பட உள்ளன. இப்பணிகள் முழுமையான வாக்காளர் பட்டியலை மாற்றியமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாக்காளருக்கும் படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை சரிபார்த்து டிசம்பர் மாதம் 9ம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணிகள் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
அப்போது வரைவு பட்டியலுக்கு ஆட்சேபம் தெரிவிக்கலாம். அதை முழுமையாக பரிசீலித்த பிறகே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். கடந்த 1950ம் ஆண்டுக்கு பிறகு 10 முறை சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2005ம் ஆண்டிற்கு பின் 20 ஆண்டுகளுக்கு பின் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவை
யில்லை. இப்பணிகள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக மேற்கொள்ளப்படும்.
கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்களை நீக்க கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தார். இந்த வாதங்களை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நவம்பர் 13ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். அன்றைய தினம் இந்த வழக்குகள் மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.
 
 
 
   