எஸ்ஐஆர் பணி புறக்கணிப்பு உத்தர பிரதேசத்தில் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: 60 பிஎல்ஓக்கள் மீது வழக்கு பதிய உத்தரவு
பஹ்ரைச்: உபியில் சிறப்பு தீவிர திருத்த பணியை புறக்கணித்த 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் 60 பிஎல்ஓக்கள் மீது வழக்கு பதிய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் கடந்த 4ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது. பஹ்ரைச் மாவட்டம்,பரைன்பாக் ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியை ஷாமா நபீஸ் என்பவருக்கு தீவிர திருத்த பணி மேற்கொள்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் நபீஸ்க்கு கடிதம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் தெரிவித்திருந்தனர். எனினும் அவர் தீவிர திருத்த பணிகளை புறக்கணித்தார். அதே போல் பல்ஹா சட்டமன்ற தொகுதியில் உள்ள நவுசர் கும்டிஹா பள்ளியில் வாக்குசாவடி நிலை அதிகாரியாக(பிஎல்ஓ) இருந்த ஆசிரியரான அனுராக் தீவிர திருபணியில் ஈடுபட மறுத்து விட்டார்.
இது பற்றி தேர்தல் ஆணையம் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில் 2 பேரையும் மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் பணியில் அலட்சியம் இருந்த புகாரில் 60 பிஎல்ஓக்கள் மற்றும் 7 மேற்பார்வையாளர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950, பிரிவு- 32ன் கீழ் வழக்கு பதிய மாவட்ட கலெக்டர் மேதா ரூபம் உத்தரவிட்டுள்ளார்.


