Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எஸ்ஐஆர் பணிகளில் குழப்பம்; கணக்கீட்டுப் படிவங்கள் கூட வழங்கப்படவில்லை தமிழ்நாட்டில் பல லட்சம் வாக்குகள் நீக்கப்படும் அபாயம் உள்ளது? ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாததால் அதிமுக ஆதரிக்கிறது என்.ஆர்.இளங்கோ பேட்டி

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம் உள்ளது என்றும், கணக்கீட்டுப் படிவங்கள் கூட வழங்கப்படவில்லை என்றும், தமிழ்நாட்டில் பல லட்சம் வாக்குகள் நீக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ கூறினார். எஸ்ஐஆர் பணிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து திமுக சட்டத் துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்றுஅளித்த பேட்டி: பீகாரை அடுத்து 2ம் கட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களில் இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை நடக்கிறது. இது பல குழப்பங்களை விளைவிக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலிலிருந்தே கூறி வந்தார். இதன் விளைவாக பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படும் அபாயம் உள்ளது.

எஸ்ஐஆர் பணிகள் தொடங்கிய நிலையில் அதில் பல குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பெரும்பாலான இடங்களில், பிஎல்ஓக்கள் என அழைக்கப்படும் அதிகாரிகள் நேற்று எந்த இடத்திற்கும் வந்து கணக்கீடு படிவங்களைத் தரவில்லை. அதிகாரிகளை விசாரித்தால், தங்களுக்கு படிவங்கள் வந்து சேரவில்லை என்று காரணம் கூறுகிறார்கள். 30 நாட்களில் ஒரு நாள் படிவங்கள் வழங்கப்படாமலே போய்விட்டது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு தொகுதிகளில் பிஎல்ஓக்கள் படிவங்களைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, மறுநாளே பூர்த்தி செய்துத தர வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, கணக்கீட்டுப் படிவங்களைக் கொடுத்து மீண்டும் பெறுவதற்கு ஒரு மாத அவகாசம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மறுநாளே படிவங்களைத் திருப்பித் தரக் கேட்பது சட்டத்தின் அடிப்படையிலானது அல்ல.

தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர்க்காக தேர்ந்தெடுத்த காலம் மிகவும் உசிதமற்றது. நவம்பர் 4ம்தேதியிலிருந்து டிசம்பர் 4ம்தேதி வரை படிவங்களை கொடுத்து திரும்ப வாங்கக்கூடிய காலத்தில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும் என்றும், அத்துடன் இது நெல் அறுவடை காலமும் ஆகும். விவசாயிகள் நிலத்தில் இருக்க வேண்டிய காலத்தில் இந்தப் பணி மிகுந்த சிரமத்துக்குள்ளான காலம். மேலும், பிப்ரவரி வரை நடக்கவிருக்கும் இந்தப் பணிகளுக்கு இடையில் கிறிஸ்மஸ்,பொங்கல் பண்டிகைகள் வருகின்றன. இவற்றை தேர்தல் ஆணையம் கணக்கில் கொள்ளவில்லை.

பீகாருக்கான தேதி அறிவிப்பை விட, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு மிகவும் மோசமானதாக இருப்பதால் தான் திமுக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. பீகாரில் கணக்கீடு படிவத்தோடு சேர்த்து ஆவணங்களைத் தர வேண்டும், ஆனால் தமிழ்நாட்டில் படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். படிவத்தைப் பூர்த்தி செய்து தரவில்லை என்றால், 30வது நாள் முடிந்த பிறகு அவர்கள் வாக்காளராக இருக்க மாட்டார்கள், புதிதாக படிவம் 6ல் வாக்காளராக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்க வேண்டும்.

தற்போதைய நடைமுறையின் கீழ், ஒவ்வொரு வாக்காளரும் தங்களுடைய 2002 மற்றும் 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியலைக் கொண்டு, அந்த விவரங்களைக் கணக்கீட்டுப் படிவத்தில் பூர்த்தி செய்து தர வேண்டும். 2002க்கு பிறகு வெளியிடப்பட்ட அனைத்து வாக்காளர்கள் பட்டியலும் செல்லுபடி தன்மை அற்றதாகிவிட்டது. தவிர்க்க இயலாத சூழ்நிலையில் இந்த எஸ்ஐஆரை எதிர்கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்துக் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களையும், மாவட்டச் செயலாளர்களையும் ஒருங்கிணைத்து, பிஎல்ஏக்களுக்கு உரிய பயிற்சியை நாங்கள் கட்சி சார்பாகச் செய்திருக்கிறோம்.

வாக்காளர்களின் வாக்குகளைப் பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருப்பதற்காகத் திமுக தலைமை அலுவலகத்தில் 8 வழக்கறிஞர்களையும், விளையாட்டு அணியைச் சேர்ந்த கவுதமன், தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த ஒருவரையும் நியமித்து ஒரு அணியைத் தொடங்கி இருக்கிறோம். எனவே, திமுகவின் நிலைப்பாடு, ‘எந்த ஒரு தகுதியுள்ள வாக்காளரும் நீக்கப்படக் கூடாது, எந்த ஒரு தகுதியற்ற வாக்காளரும் சேர்க்கப்படக் கூடாது என்பதே எங்களுடைய கோரிக்கை’. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அதிமுக இதை ஆதரிக்கத் தான் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.