எஸ்ஐஆர் செயல்முறை குறித்து வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் அவசியம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தல்
சென்னை: எஸ்ஐஆர் செயல்முறை குறித்து வெளிநாட்டு தமிழர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் அவசியம் என தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவு : வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு வாக்காளர் தொடர்பான எஸ்ஐஆர் செயல்முறையில் பல குழப்பங்கள் நிலவுகின்றன என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்.
எஸ்ஐஆர் தொடர்பான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான தனிப்பட்ட அறிவிப்பு மற்றும் விளக்கக் காணொளியை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். உலகம் முழுவதும் உள்ள இந்தியத் தூதரகங்கள் முன்வந்து வெளிநாட்டு வாழ் தமிழர்களை தொடர்புகொண்டு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும். புலம்பெயர் இந்தியர் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளின் வாயிலாகவும் தகவல் பரப்ப வேண்டும்.
சர்வதேச மொபைல் எண்களை கொண்ட பலர் ஓடிபி (OTP) பெற முடியாத நிலை காரணமாக பதிவு செயல்முறை தடுமாறுகிறது. மேலும் இந்திய குடியிருப்பாளர் வாக்காளர் மற்றும் இந்திய வெளிநாட்டு வாக்காளர் வகைப்பாட்டில் குழப்பம் இருந்து, பலர் பதிவு செய்யும் கட்டத்தில் சிக்கல்களை சந்தித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தரவு சேகரிப்புப் பணியாளர்கள் அதிகமாக உதவி செய்ய முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


