எஸ்ஐஆர் மக்களின் வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் செயல் அல்ல: சொல்கிறார் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கோவை: ‘எஸ்ஐஆர் மக்களின் வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் செயல் அல்ல’ என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்து உள்ளார். கோவை கோட்ட பாஜவின் பல்வேறு அணி பிரிவுகள், மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கோவையை அடுத்த முதலிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை, தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பட்டியல் நடவடிக்கையை எதிர்த்து போராட்டங்கள் நடத்துவது தேவையற்றது. இது, புதிதாக பாஜ கட்சியால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் இல்லை. தேர்தல் ஆணையம் அதன் பணியை செய்கிறது. 1952 முதல் 2005 வரை சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடைபெற்றுள்ளது. 2000 ஆண்டுக்கு முன்பு பத்து முறையும், இரண்டாயிரத்தில் இருந்து 2005ம் ஆண்டு வரை மூன்று முறையும் இத்திருத்தம் நடைபெற்றுள்ளது.
இந்த நடவடிக்கை, மக்களின் வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் செயல் அல்ல. இதைபற்றி பலர், முழுமையாக அறியாமல் பேசுகிறார்கள். உயிரிழந்தவர்கள் மற்றும் முகவரி மாறியவர்களை பட்டியலில் இருந்து நீக்கிவிடவும், சரியான முகவரியில் இருப்பவர்களை பட்டியலில் சேர்த்துவிடவும் இந்த நடவடிக்கை தொடர்கிறது. இதனை ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதற்கு சட்ட ரீதியாக தேர்தல் ஆணையத்திற்கு முழு உரிமை உண்டு. இந்த நடவடிக்கையை எதிர்ப்பது தேவையற்றது. தகுதியில்லாத வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து எடுக்கும் முயற்சி இது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். தொடர்ந்து, டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் குறித்த கேள்விக்கு, அதுகுறித்து முழுமையான அறிக்கை கிடைத்த பின்புதான் தகவல்கள் தெரியவரும் என்றார்
* செங்கோட்டையனுக்கு பாஜ உத்தரவிட்டதா?
அதிமுக மாஜி அமைச்சர் செங்கோட்டையன், சமீபத்தில் அளித்த பேட்டியில் பாஜ தலைவர்கள் கேட்டுக்கொண்டதால்தான் அதிமுக ஒருங்கிணைப்பு பற்றி பேசினேன், அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டேன். இது தொடர்பாக அவர் உங்களை நேரில் சந்தித்ததாக கூறப்படுகிறதே? என நிருபர்கள் கேட்டதற்கு, நிர்மலா சீதாராமன் ‘‘செங்கோட்டையன் விவகாரத்தில் பாஜ எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை நாங்கள் யார் பின்னால் இருந்தும் செயல்படவில்லை. அடுத்த கட்சியின் உள்விவகாரத்தில் பாஜ எப்போதும் தலையிடாது’’ என்றார்.
