எஸ்ஐஆர் தொடர்பாக மக்களின் கேள்வி, குழப்பம், சந்தேகம் தீர்க்க நடவடிக்கை: தேர்தல் ஆணையத்தை அணுக திமுக சட்டத்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை: எஸ்ஐஆர் தொடர்பாக மக்களின் கேள்வி, குழப்பம், சந்தேகத்தை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுக திமுக சட்டத்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபடும் திமுகவினருக்கு எழும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உதவிடும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தலைமைக் கழகம் மூலம் ஒருங்கிணைத்திட திமுக சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., மேற்பார்வையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திமுக நிர்வாகிகள் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சந்தேகங்களை 08065420020 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களை பெற்று முறையாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள எஸ்ஐஆர் வார் ரூமில் 08065420020 என்ற எண்ணில் நேற்று ஒரு நாள்(நேற்று முன்தினம்) மட்டும் 627 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. அதில் 2002ம் ஆண்டில் வாக்களித்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாற்றி குடியேறியிருந்தால், வாக்குரிமை தற்போது எந்த இடத்தில் அமையும்?.
மனைவியின் வாக்குரிமை அவரது சொந்த ஊரில் உள்ளது. இப்போது உள்ள முகவரி ஆதாரமாக ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை என்ற இரண்டு ஆவணங்கள் மட்டுமே உள்ளன. இவை மட்டும் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ள முடியுமா?. படிவத்தில் உறவினர் குறித்து தகவல் கட்டாயம் நிரப்ப வேண்டுமா?. 2024ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது. தற்போது பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்?. குடும்பத்தில் எவரேனும் வெளிநாட்டில் வேலையில் இருந்தால் அவருடைய படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது?. பெற்றோர் 2002ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?.
கணக்கீட்டு படிவத்தில் தகவல்களை தவறாக பதிவிட்டால் மீண்டும் புதிய படிவம் வழங்கப்படுமா?. பிஎல்ஓக்கள் படிவத்தை பூர்த்தி செய்ய உதவுவதில்லை. இதனால் படிவத்தை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரிசெய்வது? என கேள்விகள் கேட்டிருந்தனர். இந்த நிலையில் மக்களிடம் உள்ள பல கேள்விகளை பரிசீலித்து, குழப்பங்களையும், சந்தேகங்களையும் தீர்க்க நடவடிக்கைளை மேற்கொள்ளும்படி தேர்தல் ஆணையத்தை திமுக சட்டத்துறை சார்பில் அணுகிட மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

