புதுடெல்லி: கேரளாவில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளை உடனடியாக நிறுத்தகோரி அம்மாநில அரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் பணிகள் நிர்வாக ரீதியாக பெரும் குழப்பத்தையும் பனிச் சுமையையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவடையும் வரை எஸ்.ஐ.ஆர் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேரளா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தரப்பில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதி, மனுவை வரும் 21ம் தேதி பட்டியலிட்டு விசாரிப்பதாக உத்தரவிட்டார்.
+
Advertisement


