ஆற்காடு: எஸ்ஐஆர் படிவம் வழங்கிவிட்டு திரும்பி கொண்டிருந்த விஏஓ, பைக் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி கங்கையம்மன்பேட்டையை சேர்ந்தவர் முத்துக்குமார்(42). இவர் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 9ம்தேதி எஸ்ஐஆர் படிவம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பணி முடிந்த பின்னர் அன்று மாலை பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். ஆற்காடு அடுத்த பெரிய உப்புப்பேட்டை ஆரணி சாலையில் சென்றபோது அவ்வழியாக வந்த முதியவர் மீது மோதாமல் இருக்க பைக்கை திருப்பி உள்ளார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
+
Advertisement
