எஸ்.ஐ.ஆரில் திமுகவுக்கு ஆதரவான வாக்குகளை நீக்க திட்டம் மக்களை நேரடியாக சந்திக்க முடியாத பாஜ அரசு குறுக்கு வழியில் ஜெயிக்க முயற்சி: துணை முதல்வர் உதயநிதி குற்றச்சாட்டு
சிங்கம்புணரி: மக்களை நேரடியாக சந்திக்க முடியாத ஒன்றிய பாஜ அரசு, எஸ்.ஐ.ஆரில் திமுகவுக்கு ஆதரவான வாக்குகளை நீக்கி குறுக்கு வழியில் ஜெயிக்க முயற்சிப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆய்வுக்கூட்டம், அரசு நலத்திட்ட விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நேற்று முன்தினம் காரைக்குடியில் முப்பெரும் விழாவில் பங்கேற்றார்.
நேற்று காலை சிங்கம்புணரியில் ரூ.1 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை ஊராட்சியில் திமுக முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.தென்னரசுவின், வெண்கல சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட சிங்கம்புணரியில் உள்ள அண்ணா மண்டபம், அதன் முன்பு கலைஞர் சிலை, முன்னாள் அமைச்சர் மாதவன் சிலையை திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தொண்டர்களுடைய உழைப்பால் மக்கள் செல்வாக்கோடு இருக்கக்கூடிய திராவிட இயக்கத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று ஒன்றிய பாசிச பாஜ அரசு நினைக்கிறது. நேரடியாக மக்களை சந்திக்க முடியாதவர்கள் குறுக்கு வழியை தேடிக் கொண்டிருக்கின்றனர். அதற்காகத்தான் எஸ்ஐஆர் திருத்தத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்திருக்கின்றனர். எப்படியாவது திமுக ஆதரவு வாக்குகளை எல்லாம் குறி வச்சு நீக்க பார்க்கின்றனர். குறிப்பாக, திமுகவுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய சிறுபான்மையினர், பெண்கள், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுடைய வாக்குகளை நீக்கி, எப்படியாவது குறுக்கு வழியில் ஜெயிச்சிடலாம்னு ஒன்றிய பாஜ அரசு திட்டமிடுகிறது.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பூத்திலும், கடைசி கருப்பு, சிவப்பு தொண்டனையும் மீறி தகுதியான வாக்காளர்களை நீக்க முடியாது. நீக்க விட மாட்டோம். அதிமுக எஸ்ஐஆர் திட்டத்தை ஆதரிக்கிறது. எஸ்ஐஆருக்கு எதிராக நாம் சுப்ரீம் கோர்ட்டில் நாம் போராட்டம் நடத்துகிறோம். அதிமுக எஸ்ஐஆர்க்கு ஆதரவாக மனு தாக்கல் செய்து இருக்கின்றனர். எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாசிச பாஜவிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். தேர்தல் வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு கூறினார்.
* ‘பாஜவின் நம்பர் ஒன் அடிமை எடப்பாடி’
‘நமது முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்னைக்கு இந்தியாவுடைய நம்பர் ஒன் முதலமைச்சர் என ஒட்டுமொத்த இந்தியாவும் பாராட்டுகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியை ஒட்டுமொத்த இந்தியாவும், பாஜவின் நம்பர் ஒன் அடிமை என கேலி பண்ணிக் கொண்டிருக்கிறது. zகொஞ்சம் கூட முதுகெலும்பு இல்லாம பார்க்கிற காலில் எல்லாம் பொசுக்கு, பொசுக்குன்னு விழுந்துகிட்டு இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
விழுந்த கால் பத்தாதுன்னு இன்னைக்கு புதுசு புதுசா இருக்கிற புது கால்களை எல்லாம் தேடிக்கிட்டு போய் விழுந்துக்கிட்டு இருக்கிறார். இப்படி அடிமை கூட்டத்தையும் கொள்கையற்ற கூட்டத்தையும் அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். இது எதிர்காலத்துக்கு நாம் செய்யக்கூடிய கடமை’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
* 5 கிமீ நடந்து சென்று மக்களுடன் கலந்துரையாடல்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செஞ்சை தனியார் விடுதியில் நேற்று முன்தினம் இரவு தங்கினார். நேற்று காலை உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் செஞ்சை தனியார் விடுதியில் இருந்து நடைப்பயிற்சி மேற்கொண்டனர். கோவிலூர் சாலை வரை 5 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்று மக்களை சந்தித்து உதயநிதி உரையாடினார்.
வழியில் இரண்டாம் பீட் பகுதியில் நகர தூய்மை பணியாளர்களை அழைத்த துணை முதல்வர் சிறப்பாக பணியாற்றுவதாக பாராட்டினார். பின்னர், ‘நகரின் தூய்மை உங்கள் கையில் தான் உள்ளது’ என தெரிவித்தார். தொடர்ந்து அவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். சிறுவர்கள், பொதுமக்களும் அவருக்கு கை கொடுத்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு சென்றபோது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திடீரென அங்குள்ள டீக்கடைக்குள் நுழைந்து மக்களுடன் மக்களாக நின்று டீ வாங்கி சாப்பிட்டார். பின்னர் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 95 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகளையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து கோவிலூர் சாலை வரை நடந்து சென்றார்.


