எஸ்ஐஆர் குழப்பமானது, ஆபத்தானது டிச.4க்குள் எப்படி முடிக்க முடியும்? தேர்தல் ஆணையத்திற்கு மம்தா கடிதம்
கொல்கத்தா: தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான் மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த நிலையில் எஸ்ஐஆர் குளறுபடி குறித்து மிகக்கடுமையான வார்த்தைகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அதில்,‘‘தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள எஸ்ஐஆர் குழப்பமானது, வற்புறுத்தும் வகையில் உள்ளது.
இது மிகவும் ஆபத்தானது. இதை உடனே நிறுத்த வேண்டும். போதுமான திட்டமிடல் , தகவல் தொடர்பு இல்லாதது எஸ்ஐஆர் செயல்முறையை சீர்குலைத்துவிட்டது. பெரும்பாலான பிஎல்ஓக்கள் உரிய பயிற்சி இல்லாமை, சர்வர் செயலிழப்புகள், மீண்டும் மீண்டும் தரவு பொருந்தாத தன்மை காரணமாக ஆன்லைன் படிவங்களுடன் போராடுகிறார்கள். இந்த வேகத்தில், டிசம்பர் 4 ஆம் தேதிக்குள், பல தொகுதிகளில் உள்ள வாக்காளர் தரவை தேவையான துல்லியத்துடன் பதிவேற்ற முடியாது என்பது கிட்டத்தட்ட உறுதி.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் தீவிர அழுத்தம் மற்றும் தண்டனை நடவடிக்கை குறித்த பயத்தின் காரணமாக பலர் தவறான அல்லது முழுமையற்ற உள்ளீடுகளைச் செய்யத் தள்ளப்பட்டனர். இது உண்மையான வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கும். வாக்காளர் பட்டியலின் நேர்மையை பாதிக்கும் . இந்த செயல்முறை தொடங்கியதிலிருந்து பல அதிகாரிகள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். டிச.4 ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க முடியாது. எனவே அதை நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


