சென்னை: எஸ்ஐஆரை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு திருத்த பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இன்னும் 5 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் இப்பணி தொடங்கப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டிருக்கும் எஸ்ஐஆர் படிவம் பெரும் குழப்பம் விளைவிக்கும் வகையில் உள்ளது.
படித்தவர்கள் கூட நிரப்ப முடியாத இப்படிவத்தை பாமர மக்கள் எப்படி நிரப்புவார்கள் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி தமிழகத்தில் வாக்காளர் உரிமையை பறிக்கும் சூழல் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில், எஸ்ஐஆர் எனும் வாக்காளர் சிறப்பு திருத்த பணியை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை மண்ணடியில் உள்ள ஈக்கா பள்ளிவாசல் அருகில் மஜக பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் துணைப் பொதுச்செயலாளர் கா.அ.மு.சைபுல்லாஹ், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் நேதாஜி நகர் அன்சார் அலி, மனிதநேய வர்த்தக அணி மாநில துணைச்செயலாளர் ஏ.ஆர்.அப்துல் கதிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் ஜா.சிக்கந்தர் பாட்சா, பார்திபன், மாவட்ட செயலாளர்கள் அமீர் அப்பாஸ், அபூபக்கர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜுனைத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


