எஸ்.ஐ.ஆரை மடைமாற்றம் செய்யும் பாஜ ரூ.20,000 கோடி இறைத்து பீகார் தேர்தலில் வெற்றி: துரை வைகோ குற்றச்சாட்டு
கோவில்பட்டி: தூத்துக்குடியில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எஸ்.ஐஆர் பணியை பாஜ தான் மடைமாற்றம் செய்கிறது. இதனால் தகுதியான நபர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படுவதற்கும், தகுதியில்லாத நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளன. அரசு ஊழியர்கள், எஸ்ஐஆர் பணிகளால் எங்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதாக கூறுகின்றனர்.
பீகாரில் 1 கோடியே 25 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரு திட்டத்திற்கு மட்டும் ரூ.12,100 கோடி செலவிடப்பட்டு உள்ளது.
இதெல்லாம் கடந்த ஒன்றரை மாதங்களில் நடந்துள்ளது. நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலம் பீகார். வறுமையும், வேலையின்மையும் அதிகமுள்ள மாநிலம் அது. அப்படிப்பட்ட மாநிலத்தில் இப்படி பணத்தை கொடுக்கும்போது கண்டிப்பாக தாக்கம் இருக்கும். ரூ.20 ஆயிரம் கோடி வரை அரசு நிதியை செலவு செய்துள்ளனர். பல குறுக்கு வழிகள் மூலமாக, பீகார் தேர்தலில் பாஜ, ஐக்கிய ஜனதாதளம் மற்றும் தேர்தல் ஆணையம் சேர்ந்து, அயோக்கியர்களின் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* ‘மல்லை சத்யா விரக்தியில் பேசுகிறார்’
‘மல்லை சத்யா விரக்தியில் பல்வேறு அவதூறுகளை சொல்லிக் கொண்டுள்ளார். அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்கள் கூட வைகோ மீது இப்படியொரு குற்றச்சாட்டை வைத்தது கிடையாது. எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் அவதூறுகளை பரப்புகிறார். அவர் பேசுவதை ஒரு சமூகத்தால், இயக்கத்தால் நிராகரிக்கப்பட்ட வேதனையின் வெளிப்பாடு என்று தான் சொல்ல வேண்டும்’ என்று துரை வைகோ தெரிவித்தார்.


