சென்னை: எஸ்ஐஆர் தொடர்பாக பாஜ வாக்குச்சாவடி முகவர்களுக்கு சிறப்பு பயிற்சியை தலைவர்கள் நேற்று அளித்தனர். தமிழக பாஜ சார்பில் 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் வகையில் மாநில அளவிலான தொகுதி அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். இதில் தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜ மாநில முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது வாக்குச்சாவடி அலுவலர்களாகிய நீங்கள் உங்களது பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக வாக்காளர் திருத்த பணிகள் நடைபெறுகிறதா என்பதை முழுமையாக கண்காணிக்க வேண்டும். சரியான வாக்காளர்களை பெயர் பட்டியலில் இருந்து நீக்காமல் இருக்கவும், முதல் தலைமுறை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இறுதியில், முகவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை மேடையில் இருந்த தலைவர்களிடம் கேட்டறிந்தனர். தலைவர்களும் அதற்கு உரிய விளக்கங்களை அளித்தனர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் பாஜ தனது முழு ஒத்துழைப்பை வழங்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் எஸ்ஐஆர் என்று சொல்லப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்படுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் மட்டும் போதாது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் இதில் முழுமையாக ஈடுபட வேண்டும்.” என்றார்.
* நிருபருடன் அண்ணாமலை கடும் வாக்குவாதம்
பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வந்தார். அவர் காரில் இருந்து இறங்கியதும் பத்திரிகையாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முற்பட்டனர். அப்போது ஒரு ஏஜென்சி நிறுவனத்தை சேர்ந்த தொலைக்காட்சி நிருபர் ஒரு கேள்வியை கேட்க முற்பட்டார். அப்போது அண்ணாமலை, அந்த நிருபரிடம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார். ஏன், நான் உள்ளே வந்ததும் இதே மாதிரியான கேள்விகளை முன்வைக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கோபத்துடன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அண்ணாமலை சென்று விட்டார்.
