எஸ் ஐ ஆர் திருத்தம் தொடர்பான விவகாரத்தில் பி.எல்.ஓ-க்களின் பணிச்சுமையை குறைக்க கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்திய தேர்தல் ஆணையம் ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை’ மேற்கொண்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் பணிக்கு எதிராக தமிழக வெற்றி கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சூர்யகாந்த அமர்வில் இன்று நடைபெற்றது. தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபடும் கடுமையான மன உளைச்சலுக்கு நாடு முழுவதுமே ஆளாகி வருகிறார்கள் என்றும், ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த போதிலும் எஸ்.ஐ.ஆர் பணி காரணமாக விடுமுறை தர மறுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த உதாரணம் போல் இன்னும் ஏராளமான உதாரணங்கள் இருக்கிறது என வாதிட்டனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 50 தேர்தல் அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், பலர் உயிரிழந்துள்ளனர்! அவர்களை பணியிலிருந்து விடுவிக்கவும் தேர்தல் ஆணையம் மறுப்பதாக வாதம் முன்வைக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் தேர்தல் அலுவலர்கள் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டால் அவர்களை விடுவித்து விட்டு வேறு நபர்களை நியமிக்கலாம் என ஆலோசனை வழங்கியதோடு கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட சூழலுக்கு ஈடு கொடுக்க முடியாத நபர்களை மாநில அரசுகள் தேர்தல் பணிகளுக்கு அனுப்பாமல் இருக்கலாம் என தெரிவித்தனர். தொடர்ந்து பணிச்சுமை புகார் தெரிவிக்கும் தேர்தல் அலுவலர்களை பணியில் இருந்து விடுவிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்ததோடு, பி.எல்.ஓ-களுக்கு அதிக அளவில் பளிச்சுமை ஏற்படாத வண்ணம் போதுமான ஊழியர்களின் மாநில அரசுகள் தந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே நேரத்தில் தற்போது பணியில் உள்ள பி.எல்.ஓ-க்களின் பணிச் சுமையை குறைக்கும் வகையில் கூடுதல் பணியாளர்களை தேர்தல் பணியில் பணியமர்த்தவும் உத்தரவிட்டு தமிழக வெற்றி கழகத்தின் மனு முடித்து வைக்கப்படுவதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். ஆனால் உயிரிழந்த பி.எல்.ஓ-களுக்கு நிவாரணம் கேட்பது உள்ளிட்ட சில கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் இருப்பதால் தங்களது மனுவை முடித்து வைக்க கூடாது என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

