ஒரு பக்கம் எஸ்ஐஆருக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தினாலும் தமிழகத்தில் மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கும் திமுக: மண்டல பொறுப்பாளர்கள் நேரடியாக கண்காணிப்பு
சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் பொதுமக்களுக்கு எழும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உதவிடும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையத்தின் 08065420020 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களை மக்கள் கேட்டு தெரிந்து வருகின்றனர்.
அதே நேரத்தில் எஸ்ஐஆர் பணிகளை எதிர்க்கொள்ளும் வகையில் திமுக மாவட்டச் செயலாளர்கள்-தொகுதி பார்வையாளர்களுக்கு சென்னையில் எஸ்ஐஆர் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. ஒன்றிய-நகர-பேரூர் திமுக நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர் குழுவினரால் ஒவ்வொரு தொகுதியிலும் எஸ்ஐஆர் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டியினர் வாக்காளர் விவரங்களை சேகரித்து நிரப்ப தலைமையிலிருந்து படிவமும், செயலியும் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்ஐஆர் பணிகள் நடைபெறுவதை அந்தந்த மண்டல பொறுப்பாளர்களான கனிமொழி, கே.என்.நேரு, எ.வ.வேலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, செந்தில்பாலாஜி நேரடியாக கண்காணித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக எட்டு வழக்கறிஞர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தலைமைக்கழக உதவி மையத்தில் பெறப்பட்ட புகார்கள், கேள்விகள், சந்தேகங்கள் உடனடியாக மண்டல பொறுப்பாளர்களுக்கும், வழக்கறிஞர் குழுவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு தீர்க்கப்படுகிறது.
இது தவிர, தமிழ்நாடு முழுவதும் பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் வாரியாக தலைமைக்கழக உதவி மையத்திலிருந்து அழைப்பு மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் எஸ்ஐஆர் செயல்படுத்தப்படும் விதம் விசாரிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்படுகிறது. ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் உறுப்பினராக இணைந்தவர்கள் விவரங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படுவதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ளாத போது பல இடங்களில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பிஎல்ஓக்களுக்கு திமுகவினர் பாடம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் எஸ்ஐஆருக்கு எதிராக சட்டப்போராட்டத்தை நடத்தினாலும் களத்தில் பம்பரமாக சுழன்று அசுர பலத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது திமுக என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் பொதுமக்களுக்கு எழும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உதவிடும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
* இந்த உதவி மையத்தின் 08065420020 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களை பொதுமக்கள் கேட்டு தெரிந்து வருகின்றனர்.
