மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் எஸ்ஐஆர் பணிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் இன்று ஆய்வு செய்தார். இதில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் 11 மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) மேற்கொள்ளும் பணி நடந்து வருகிறது. இதற்காக வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று விண்ணப்பங்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்ஐஆர் எனப்படும் இப்பணி தொடர்பான மண்டல ஆய்வுக்கூட்டம், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் யெட்டூரு, இந்திய தேர்தல் ஆணைய இயக்குநர் கே.கே.திவாரி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாவட்ட தேர்தல் அலுவலர்களாக மதுரை கலெக்டர் பிரவீன்குமார், சிவகங்கை கலெக்டர் பொற்கொடி, ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங், திண்டுக்கல் கலெக்டர் சரவணன், விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா, தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத், நெல்லை கலெக்டர் சுகுமார், தென்காசி கலெக்டர் கமல்கிஷோர், கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா, புதுக்கோட்டை கலெக்டர் அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், எஸ்ஐஆர் திருத்த பணிகளை மேற்கொள்வது, புதிய வாக்காளர் சேர்த்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
