கொல்கத்தா: எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக கொல்கத்தாவில் இன்று முதல்வர் மம்தா தலைமையில் கண்டன பேரணி நடைபெற்றது. எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘மகா மிச்சில்’ என்ற பெயரில் மாபெரும் கண்டனப் பேரணிக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இன்று பிற்பகல் 2 மணியளவில் கொல்கத்தாவின் செஞ்சாலை பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லமான ஜோராசங்கோ தாகுர்பாரி வரை இந்தப் பேரணி நடைபெறுகிறது.
இந்தப் பேரணிக்கு முன்னதாக பேசிய மம்தா பானர்ஜி, ‘இந்த சிறப்புத் திருத்தப் பணி என்பது, மவுனமான, கண்ணுக்குத் தெரியாத தேர்தல் முறைகேடு. இது, சிறுபான்மையினர் மற்றும் உண்மையான வாக்காளர்களின் வாக்குகளைப் பறிக்கும் நோக்கில், பின்வாசல் வழியாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) அமல்படுத்தும் முயற்சி’ என்று குற்றம் சாட்டினார். இந்த விவகாரம், 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதலை மேலும் பலப்படுத்தியுள்ளது.
 
 
 
   