மானாமதுரை: எஸ்ஐஆர் மூலம் அனேகரின் வாக்குகளை திருட வாய்ப்பு உள்ளது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். `உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்னும் பெயரில் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நேற்றிரவு நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: எஸ்ஐஆர் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருப்போரின் பெயர்களை நீக்கிவிட்டு இறந்தவர்கள், இடம்மாறி சென்றவர்களின் வாக்குகளை போட முயற்சி நடக்கிறது.
நிறைய பேரின் வாக்குகளை திருடக்கூடிய வாய்ப்புள்ளது. நமது மக்களுக்கு வாக்கு திருட்டு பற்றி கட்சியினர் வீடு, வீடாக சென்று எடுத்துரைக்க வேண்டும். வாக்காளர்கள் நமக்கு வாக்கு உள்ளதா என்பதை வாக்குச் சாவடிகளுக்கு நேரில் சென்று உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால்தான் அரசின் திட்டங்கள், பயன்கள், சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும். நமது வாக்கை உறுதி செய்துகொண்டால் அதை திருடுவதற்கு எந்த கொம்பனாலும் முடியாது. அதையும் மீறி வாக்கு திருட்டு நடந்தால் மக்கள் புரட்சி வெடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


