தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் எடுபடாது.. திமுகவில் இருப்பவர்களுக்கு ஓய்வு என்பதே இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
திருச்சி: திருச்சியில் திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்திப் பேசினார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில் கூறியதாவது; தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். மூலம் திமுகவை அழிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் எடுபடாது. எஸ்.ஐ.ஆர். மூலம் தான் திமுக அழிக்க முடியும் என சிலர் நினைக்கிறார்கள். எஸ்ஐஆரை அதிமுக ஆதரித்துக் கொண்டிருக்கிறது. எஸ்.ஐ.ஆரை எதிர்க்க அதிமுகவுக்கு தைரியம் இல்லை. எஸ்ஐஆர் குறித்து உள்ளபடி அக்கறை இருந்தால் அதிமுக முன்கூட்டியே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்க்க அதிமுகவுக்கு தைரியம் இல்லை.
திமுக தொடர்ந்த வழக்கில் தங்களை இணைக்க அதிமுக மனு செய்தது கபட நாடகம்தான். எஸ்ஐஆர் பணி குறித்து அதிமுக திடீரென்று வழக்கு தொடர்வது ஏன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும், டெல்லியில் இருக்கும் பிக் பாஸுக்கு எடப்பாடி பழனிசாமி ஆமாம் சாமி போட்டுக் கொண்டு இருக்கிறார். எல்லோருக்கும் எல்லாம் என்ற முறையில் தான் திமுக ஆட்சி நடந்துக் கொண்டு இருக்கிறது. எஸ்ஐஆரை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. எஸ்ஐஆர் என்பது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிரிகள் புதுப்புது உத்திகளோடு நம்மை தாக்க புதுப்புது முயற்சிகள் எடுக்கின்றனர்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்ற ஆயுதத்தை எடுத்து திமுகவை அழிக்க நினைக்கின்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஐ.ஆர். என்றால் என்ன என்பது பற்றி மக்கள் தெரிந்து கொள்ள நேற்று வீடியோ வெளியிட்டேன். உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் 80 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ளேன்.
நிற்க நேரமில்லாமல் நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். திமுகவை இயக்கம் என்று சொல்வதால்தான் நமக்கு ஓய்வே இல்லை என்று கூறுகிறேன். சிறிய சிறிய தடைகளை பார்த்துக்கூட நமது திமுக இயக்கம் நின்றதே இல்லை. ஏங்கிக் கொண்டே இருந்தால் அது ஏக்கம், இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அது இயக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

