கொல்கத்தா: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முறையாக திட்டமிடப்படாத குழப்பமான நடவடிக்கையாக உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்து உள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிச்சுமை, போதிய பயிற்சியைன்மை உள்ளிட்ட காரணங்களால் தங்களால் இந்த பணியில் ஈடுபட முடியவில்லை என வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. பணிச்சுமை காரணமாக 4 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உயிரிழந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார் அதில் எஸ்.ஐ.ஆர் குறித்து பலமுறை தனது எதிர்ப்பை தெரிவித்திருந்த நிலையில், இதன் பாதிப்புகள் மோசமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மக்கள் மீது தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர்-ஐ திணித்த விதம் திட்டமிடப்படாததாகவும், குழப்பமானதாகவும் அது மட்டுமின்றி ஆபத்தானதாகவும் மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடிப்படை தயாரிப்புகள், தெளிவான தகவல் தொடர்பு, போதுமான திட்டமிடல் இல்லாமல் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளதாகவும் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். கட்டாய ஆவணங்கள் குறித்த குழப்பம் மற்றும் வேலை நேரத்தில் வாக்காளர்களைச் சந்திக்க முடியாத நிலை ஆகியவற்றால் இந்த செயல் முறை முதல் நாளில் இருந்தே முடங்கியுள்ளதாகவும் மம்தா பானர்ஜி தனது கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.


