SIR நடவடிக்கை.. சென்னையில் ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு!!
சென்னை: தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு திவீர திருத்த(எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கையை கண்டித்து, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;
“இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனம் என்றைக்கு பா.ஜ.க.வின் விருப்பப்படி நடக்க ஆரம்பித்ததோ அது முதற்கொண்டு அதன் தனித்தன்மையையும், சுதந்திரத்தையும் முற்றிலும் இழந்து விட்டது. கடந்த காலங்களில் கர்நாடகா, மராட்டிய மாநிலம், அரியானா சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் துணை கொண்டு வாக்காளர் பட்டியலில் மோசடி செய்து பா.ஜ.க. வெற்றி பெற்றதை ஆதாரத்துடன் தலைவர் ராகுல்காந்தி பலமுறை ஊடக சந்திப்புகள் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே 16 நாட்கள் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவுடன் இணைந்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பீகார் மக்களிடையே பா.ஜ.க.வின் வாக்கு திருட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆனாலும், பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டை தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு, அது நிலுவையில் உள்ளது.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. தொடுத்த வழக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்றால் மக்களின் வாக்குரிமையும், குடியுரிமையும் பறிபோகிற அபாயம் ஏற்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டிருக்கிறோம்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெற வேண்டுமென்றால் சிறப்பு தீவிர திருத்தத்தின் செயல்முறை எவ்வித குளறுபடியுமின்றி வெளிப்படைத்தன்மையோடு நடைபெற வேண்டும். சிறப்பு தீவிர திருத்த நடைமுறைக்கான சட்டப்பூர்வ ஆதாரத்தை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டுமென்று மனுவில் குறிப்பிட்டுள்ளோம். சிறப்பு தீவிர திருத்தம் சட்டத்திற்கு விரோதமாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவிற்கு முரணாகவும், அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிக்கப்படாத, நாடாளுமன்றத்தில் வைக்கப்படாத நடைமுறைகளை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்வது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில் குடியுரிமைச் சட்டம் -1955 இன் கீழ் ஒன்றிய அரசுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களை தேர்தல் ஆணையம் கையகப்படுத்தியுள்ளது. உள்ளுர் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு குடியுரிமை குறித்து முடிவு செய்ய அதிகாரம் அளிப்பதன் மூலம் மக்களின் குடியுரிமைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளுடன் கலந்து பேசாமல் தேர்தல் ஆணையம் இத்தகைய நடைமுறைகளை தன்னிச்சையாக திணிப்பது கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் செயலாகும்.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்களாக இருந்தாலும் அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பட்டவர்கள்தான். எனவே, சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக மற்ற மாநிலங்களில் எத்தகைய வாக்குத் திருட்டை கையாண்டு பா.ஜ.க. குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்ததோ, அதே அணுகுமுறையை தமிழ்நாட்டிலும் பின்பற்ற தேர்தல் ஆணையத்தோடு கூட்டணி வைத்து பா.ஜ.க. பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க.வோடு இணைந்து காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுத்திருந்தாலும் சிறப்பு தீவிர திருத்த முயற்சிகளை கண்டித்து நாளை தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடத்த இருக்கிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
நாளை காலை 10.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் எனது தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மத்திய பா.ஜ.க. அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து நடத்தி வருகிற வாக்குத் திருட்டையும், சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில் நடத்த முனைகிற வாக்காளர் மோசடி குறித்து தமிழ்நாட்டு மக்களிடையே எதிர்ப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த நாளை நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என அன்போடு அழைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

