நியூயார்க்: யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு, கார்லோஸ் அல்காரஸ், ஜானிக் சின்னர் தகுதி பெற்றுள்ளனர். யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் நேற்று ஆடவர் அரையிறுதி ஆட்டங்கள் நடந்தன. முதல் அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (38 வயது, 7வது ரேங்க்), ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் (22 வயது, 2வது ரேங்க்) நேற்று நேருக்கு நேர் சந்தித்தனர். இருவரும் யுஎஸ் ஓபன் முன்னாள் சாம்பியன்கள். கார்லோஸ் ஒரு முறையும், ஜோகோவிச் 4 முறையும் யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். இந்த யுஎஸ் ஓபனில் வென்றால், அது ஜோகோவிச்சுக்கு 25வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாக அமையும்.
அதனால் இறுதி ஆட்டத்துக்கு முன்னேற ஜோகோவிச் கூடுதல் வேகம் காட்டுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஆட்டத்தில் தொடக்கம் முதலே கார்லோஸ் கை ஓங்கியிருந்தது. மொத்தம் 5 செட்கள் கொண்ட ஆட்டத்தில் 3 செட்களையும் 6-4, 7-6 (7-4), 6-2 என்ற புள்ளிக் கணக்கில் தொடர்ந்து கார்லோஸ் கைப்பற்றினார். அதனால் 2மணி 23 நிமிடங்களில் ஜோகோவிச் 0-3 என நேர் செட்களில் வீழ்ந்தார். அதன் மூலம் 25வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் கனவு அரையிறுதி உடன் கலைந்தது. மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர் (24 வயது, 1வது ரேங்க்), கனடாவின் ஃபெலிக்ஸ் அகர் (27 வயது, 24வது ரேங்க்) களம் கண்டனர். இந்த போட்டியில், 6-1, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சின்னர் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.